கரூர் அருகே கஞ்சா பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு..!

அரசியல்

கரூர் அருகே கஞ்சா பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு..!

கரூர் அருகே கஞ்சா பயிரிட்ட  காங்கிரஸ் பிரமுகர் தலைமறைவு..!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கடவூர் அருகே மயிலம்பட்டி என்ற கிராமத்தில் ஒரு தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிடப்பட்டுள்ளதாக திருச்சி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது தொடர்பாக திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று காலை திருச்சி போதைப்பொருள் தடுப்பு பிரிவு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு டோங்கரே தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமார், ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் தோட்டத்தில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த தோட்டத்தில் தென்னை, மா மரங்கள் இருந்தன. சோளம், மல்லிகை பூக்களும் பயிரிடப்பட்டிருந்தன. இவற்றிற்கிடையில் சுமார் ஒரு ஏக்கரில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.இதையடுத்து திருச்சி சரக டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, சிந்தாமணிப்பட்டி இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் மற்றும் போலீசார் குறிப்பிட்ட தோட்டத்திற்கு சென்று கஞ்சா செடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். இதைப்பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. இந்த கஞ்சா பயிர் செடியை கடவூர் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் அருணாச்சலம் என்பவர் மயிலம்பட்டி கிராமத்தை சேர்ந்த நிஜாமுதீன் என்பவரிடம் தோட்டத்தை 2 வருடத்திற்கு குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். இதை அருணாசலத்தின் மாமனார் தங்கவேல் மூலம் பராமரித்து வந்துள்ளார். தேனி மாவட்டம் வருசநாட்டைச் சேர்ந்த முருகன் என்பவர் கஞ்சா பயிர் செடிகளை தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து தங்கவேல் மற்றும் முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் தேனியைச் சேர்ந்த கர்ணன், சின்னகருப்பு என்ற வேலுத்தேவர் ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் அருணாச்சலம் மற்றும் கர்ணன் ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். அருணாச்சலம் பெங்களூரில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவரை பிடிக்க தனிப்படை விரைந்துள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் இருந்து அருணாசலம் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சின்னசாமி கட்சி தலைமைக்கு தெரிவித்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து கஞ்சா செடிகளை ஆய்வு செய்த பின்னர் அவற்றை அழிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மேலும், காங்கிரஸ் பிரமுகரான அருணாச்சலம் வட்டார தலைவர் என்பதும், இவர் கரூர் காங்கிரஸ் எம்.பி யின் தீவிர விசுவாசியும் ஆவார் என்பதினால் காங்கிரஸ் மேலிட வட்டார அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...