திமுகவின் ‘நீட் தேர்வு ரத்து என்னாச்சு…? முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – ஓ.பி.எஸ்

அரசியல்

திமுகவின் ‘நீட் தேர்வு ரத்து என்னாச்சு…? முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ – ஓ.பி.எஸ்

திமுகவின் ‘நீட் தேர்வு ரத்து என்னாச்சு…?  முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ –  ஓ.பி.எஸ்

மத்திய அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுத்து, வரும் கல்வியாண்டிலாவது, ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் :- மத்திய காங்கிரஸ் அரசால், 2010ல் ‘நீட்’ தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட போதே, அந்த கட்சிக்கு கொடுத்த ஆதரவை, தி.மு.க., விலக்கி இருந்தால், ‘நீட்’ பிரச்னையே வந்திருக்காது. எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக, 2021 சட்டசபை பொதுத் தேர்தலின் போது, ‘நீட் தேர்வை ரத்து செய்கிற ரகசியம் தி.மு.க.,வுக்கு தெரியும்’ என்றெல்லாம் பிரசாரம் செய்யப்பட்டது.ஆனால், இன்று வரை எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. நீட் தேர்வு ரத்து குறித்த சட்ட முன்வடிவு, தமிழக சட்டசபையில், 2021 செப்., 13ல் நிறைவேற்றப்பட்டது.


அதை மறுபரிசீலனை செய்யக்கோரி, பிப்., 1ம் தேதி, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, பிப்., 8ம் தேதி சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்தி, மீண்டும் நீட் தேர்வு ரத்து சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒன்றரை மாதங்களுக்கு மேலாகியும், அதற்கான ஒப்புதல் பெறப்பட்டதாக தெரியவில்லை.இரு தினங்களுக்கு முன், பிரதமரை சந்தித்த முதல்வர், நீட் தேர்வு குறித்து பிரதமரிடம் பேசியது பற்றியோ, அதற்கு அவர் அளித்த பதில் குறித்தோ, எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், அடுத்த கல்வியாண்டு இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, ஜூலை 17ம் தேதி நடக்க உள்ளதாகவும், அதற்கான இணைய தள பதிவு துவங்க உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.இந்த சூழ்நிலையில், வரும் கல்வியாண்டில் மருத்துவ சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்படுமா அல்லது நீட் தேர்வு அடிப்படையில் மேற்கொள்ளப்படுமா என்று, மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இந்த குழப்பத்திற்கான விடை விரைவாக கிடைத்தால் தான், அதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க முடியும். எனவே, வரும் கல்வியாண்டிலாவது நீட் தேர்வை ரத்து செய்ய, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave your comments here...