2023க்குள் 50 சதவீதம் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும்: டெல்லி அரசு..!

Scroll Down To Discover

காற்று மாசினால் மூச்சுத் திணறி வரும் தலைநகர் டில்லியில், வாடகை கார் மற்றும் டெலிவரி நிறுவனங்கள் தங்களிடம் இணைக்கும் புதிய வாகனங்களில் 50 சதவீதத்தை மின்சார வாகனங்களாக இணைக்க வேண்டும் என டில்லி சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார்.

டில்லியில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு பொதுமக்களின் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு பெரும் பிரச்னையாகியுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் இதனால் அவதிப்படுகின்றனர். டில்லி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் மூலம் காற்று மாசை கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளது.

தற்போது ஆன்லைனில் பதிவு செய்து பயணிக்கும் வாடகை வாகனங்கள், டெலிவரி வாகனங்களுக்கான புதிய வரைவு கொள்கையையும் உருவாக்கியுள்ளது. அதன்படி, இறுதிக் கொள்கை அறிவிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் அத்தகைய நிறுவனங்கள் புதிதாக இணைக்கும் இரு சக்கர வாகனங்களில் 10 சதவீதமும், நான்கு சக்கர வாகனங்களில் 5 சதவீதமும் மின்சார வாகனங்களாக இருக்க வேண்டும்.

தொடர்ந்து, மார்ச் 2023க்குள் அந்த எண்ணிக்கையானது இருசக்கர வாகனங்களில் 50 சதவீதமாகவும், நான்கு சக்கர வாகனங்களில் 25 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ‘இந்த புதிய கொள்கை டில்லியில் காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்கு வலுவான முயற்சி’ என அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார்.