1,800-க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நிதியை மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது..!

Scroll Down To Discover

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 2014ல் பதவியேற்றபோது, விதிமுறைகளை மீறி செயல்படும், என்.ஜி.ஓ., எனப்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க துவங்கியது. இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதியை, நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான விஷயங்களுக்கு பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்தது.இதையடுத்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தை, மத்திய அரசு கடுமையாக்கியது. இதன்படி, ‘தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பெறும் நிதி எவ்வளவு, அவை எதற்காக செலவிடப்பட்டது என்பது போன்ற விபரங்களை, ஒவ்வொரு ஆண்டும், வருமான வரி தாக்கல் அறிக்கையுடன் சேர்த்து, அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், இந்தாண்டு மட்டும், நாடு முழுவதும், 1,807 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், கணக்கு அறிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் தாக்கல் செய்யவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிறுவனங்களின், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் பதிவுகள் ரத்து செய்யபட்டுள்ளதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ராஜஸ்தான் பல்கலை, அலகாபாத் விவசாய கல்வி நிறுவனம், குஜராத் ஒய்.எம்.சி.ஏ., கர்நாடகாவில் செயல்படும் சுவாமி விவேகானந்தா கல்வி குழுமம் ஆகியவை, பதிவு ரத்து செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் முக்கியமானவை.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து, இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும், விதிமுறைகளை மீறி செயல்பட்ட, 14 ஆயிரத்து, 800 தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.