நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக -பாஜக தலைவர் முருகன்
- June 9, 2021
- : 681

நீட் தேர்வை ரத்து செய்ய இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க. வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கி உள்ளனர்’ என தமிழக பா.ஜ. தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.
நீட் எனப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2010ம் ஆண்டு காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 2013ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது. அதற்கு எதிராக மேல்முறையீடு செய்தது திமுக – காங்கிரஸ் கூட்டணி. அதன் பிறகே நீட் தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
நீட் தேர்வு விவகாரத்தில் மக்களை ஏமாற்றும் திமுக!
மாநிலத் தலைவர் டாக்டர் திரு.@Murugan_TNBJP அறிக்கை#LMurugan pic.twitter.com/Tv4m3BgCoR
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) June 8, 2021
ஆளும் கட்சியாக இருந்த போது நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க.,வும், காங்கிரசும் எதிர்க்கட்சியாக இருந்தபோது அதை கடுமையாக விமர்சித்தனர். தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையிலும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என, மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது, ஆட்சிக்கு வந்த தி.மு.க., நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டு, மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய குழு ஒன்றை அமைத்துள்ளது.நீட் தேர்வை நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகு தான் தீர்ப்பு வழங்கியது.
முந்தைய அ.தி.மு.க., அரசும், ஆணையம் அமைத்து 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது. இதன் மூலமாக கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். இதை தடுக்க, தி.மு.க., அரசு முயல்கிறது. இதுதான் மாணவர்கள் மீது தி.மு.க., காட்டும் பரிவா? வீம்புக்காக அரசு செய்யும் இத்தகைய செயல்கள் மாணவர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தை கலைத்து, மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் .
இவ்வாறு அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...