வங்கி வடிக்கையாளருக்கான விழிப்புணர்வு செய்தி…!

இந்தியாசமூக நலன்

வங்கி வடிக்கையாளருக்கான விழிப்புணர்வு செய்தி…!

வங்கி வடிக்கையாளருக்கான விழிப்புணர்வு செய்தி…!

வங்கியில் அடகு வைத்த நகையை திருப்ப காலை 9.30 மணிக்கெல்லாம் சென்று அடகு அட்டையை கொடுக்க வேண்டுமா ? வேண்டாம் என்கிறார்கள் வங்கியின் மேல்மட்ட அதிகாரிகள்

கொரோனா நேரத்தில் வங்கி அதிகாரிகள் அலைய விட்ட பரிதாபம் – தான் செய்தது தவறு என வங்கி அதிகாரிக்கு உணர வைத்து வருத்தம் தெரிவிக்க வைத்த நிகழ்வு

பணம் இருந்தும் நகையை திருப்ப இயலாமல் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்ட நிலை :

நண்பர்களே சில நாட்களுக்கு முன்பாக கொரோனா காலத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட மிகப்பெரிய வங்கியில் அடகு வைத்த நகையை திருப்புவதற்காக மதியம் பன்னிரண்டரை மணி அளவில் சென்றிருந்தேன். வங்கிக்கு சென்று நான் அடகு வைத்திருந்த நகைக்கு பணத்தைக் கட்டி மீட்டு கொள்கிறேன் என்று கூறிய பொழுது. இல்லை நீங்கள் காலையில் ஒன்பது முப்பது மணி அளவில் வரிசையில் நின்று அட்டையை கொடுத்து டோக்கனை பெற்று கொண்டு மதியம் ஒரு மணிக்கு மேல் தான் வந்து நகையை பெற்றுக் கொள்ள வேண்டும். இன்று வெள்ளிக்கிழமை காலையில் நேரம் முடிவடைந்து விட்டது. மீண்டும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை (அரசு விடுமுறை ) 3 நாள் விடுமுறை முடிந்து செவ்வாய்க்கிழமை வந்து பணத்தை செலுத்தி நகையை மீட்டு கொள்ளுங்கள் என்று தெரிவித்து விட்டார்கள். மூன்று நாட்கள் அந்தப் பணம் என்னிடம் இருக்குமா அல்லது வேறு ஏதேனும் செலவுகளுக்கு பயன்பட்டு விடுமா என்ற சிந்தனை என்னுள் ஓட ஆரம்பித்தது.

வங்கி மேலாளரிடம் வேண்டுகோள் :

உடனடியாக வங்கியின் மேலாளர் அவர்களை சென்று எனது கோரிக்கையை வைத்தேன். நான் பணம் எடுத்து வந்துவிட்டேன். எனக்கு நகையை திருப்பி தாருங்கள் என்று கேட்டு பார்த்தேன். அவரோ இல்லை அதற்கான வாய்ப்பு கிடையாது. தாங்கள் செவ்வாய்க்கிழமை காலையில் ஒன்பது முப்பது மணிக்கு வரிசையில் நின்று அட்டையை கொடுத்தால் மதியம் ஒரு மணிக்கு மேல் நகை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தார். எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

நகை அட்டையை கொடுக்க காலை 9.30 மணிக்கு வர தேவை இல்லை :

ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா சட்டத்தின்படி ஒருவர் வங்கி முடிவடையும் நேரத்திற்கு முன்பாக எப்பொழுது வந்தாலும் கடன் அதற்கான தொகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பதை வங்கி மேலாளர் ஒருவரின் மூலமாக அறிந்து கொண்டேன். அதனை வலியுறுத்தி மேலாளர் அவர்களிடம் எனது நகையை மீட்டு தருமாறு கேட்டேன். அவர் ஈவு இரக்கமில்லாமல் முடியாது என்று என்னை திருப்பி அனுப்பி விட்டார்.

மூன்று நாள் கழித்து நகையை மீட்ட கொடுமை :

மீண்டும் மூன்று நாட்கள் காத்திருந்து ,மிகவும் மனவேதனையுடன் ,மன உளைச்சலுடன் அந்த வங்கிக்கு சென்றேன். நாங்கள் வெள்ளிக்கிழமை நகையை திருப்புவதற்காக சென்றதே ஞாயிற்று கிழமை ஒரு முக்கியமான திருமணத்திற்கு நகையை அணிந்து கொண்டு செல்ல வேண்டி இருந்ததால் தான் கடன் வாங்கி நகையை திருப்புவதற்காக பணத்தை கட்டிவிட்டு மீட்டெடுக்க நான் சென்றிருந்தேன். வங்கி மேலாளர் அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு நகையைத் தராத காரணத்தினால் என்னால் அந்த திருமணத்திற்கு செல்ல முடியாமல் போய்விட்டது. வீட்டிலும் அதனால் பல்வேறு மன வருத்தங்கள் ஏற்பட்டது. இது போன்ற சூழ்நிலையில் திங்கள்கிழமை அன்று வேறு ஒரு முக்கியமான செலவும் வந்துவிட்டது. அதையெல்லாம் தாக்குப்பிடித்து செவ்வாய்க்கிழமை காலையில் வங்கிக்குச் சென்று வரிசையில் நின்று அட்டையை கொடுத்து விட்டு மதியம் ஒரு மணிக்கு மேல் நகையைத் திருப்புவதற்காக நான் சென்றேன். வங்கியிலிருந்து அதிகாரியோ காலையிலிருந்து ஆன்லைன் சரியாக வேலை செய்யாததால் இன்னும் ஒரு மணி நேரம் காத்திருங்கள் என்று தெரிவித்துவிட்டார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

மற்றொரு வங்கியின் பாராட்ட வேண்டிய செயல் : சட்டம் வங்கிக்கு வங்கி மாறுமா ?

இங்கு குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம். மற்றொரு நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் வெள்ளிக்கிழமை அன்றே மதியம் ஒரு மணிக்கு மேல் சென்று எனது நகையை திருப்புவதற்காக பணத்தைக் கட்டுவதாக தெரிவித்தேன். உடனடியாக என்னிடம் பணத்தை பெற்றுக்கொண்டு நகையை அரைமணிநேரத்தில் திருப்பிக் கொடுத்து விட்டனர். அவர்களும் அரசுடைமையாக்கப்பட்ட வங்கி தான். நான் முன்பு சென்ற வங்கியும் மிகப்பெரிய அரசுடமையாக்கப்பட்ட வங்கிதான். ஆனால் இருவருக்குமான சட்டம் எங்கே மாறுகிறது என்பது எனக்கு புரியாத புதிராக இருந்தது.

வங்கியில் இல்லாத புதிய விதிகளை ஏற்படுத்தி மக்களை அவதி படுத்தும் வகையில் செயல்படுத்தும் வங்கி அதிகாரிகள் :

எந்த வங்கியிலும் காலை 9:30 மணிக்கெல்லாம் வந்து வரிசையில் நின்று அட்டையை கொடுத்து மதியம் ஒரு மணிக்கு மேல் நகை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று உத்தரவுகள் இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொண்டேன் . ஆனாலும் எனது நகையை பெறவேண்டும் என்கிற காரணத்தினால் நாட்டுடமையாக்கப்பட்ட மிகப்பெரிய வங்கியில் மதியம் ஒரு மணிக்கு மேலும் ஆன்லைன் வேலை செய்யாத நிலையில் இரண்டரை மணி வரை காத்திருந்து மீண்டும் எனது நகையை மீட்டு கொண்டு வந்தேன். வெள்ளிக்கிழமை பெறவேண்டிய நகை ஆனது சனிக்கிழமை முடிந்து, ஞாயிற்றுக்கிழமை முடிந்து, திங்கள்கிழமை முடிந்து செவ்வாய்க்கிழமை மதியம் தான் என்னால் பெற முடிந்தது.

வங்கியின் கிரிவென்ஸ் செல்லுக்கு கம்பளைண்ட் செய்தல் :

இந்த நிகழ்வு என்னுள் மிகப்பெரிய மன உளைச்சலாக இருந்தது. இந்த விவரங்கள் அனைத்தையும் எழுதி நாட்டுடமையாக்கப்பட்ட மிகப்பெரிய வங்கியின் கிரிவென்ஸ் செல்லுக்கு என்னுடைய தகவலை அனுப்பி வைத்தேன். ஆனால் வங்கியில் இருந்தோ, வங்கி அதிகாரிகளிடம் இருந்தோ எனக்கு எந்தவிதமான தகவலும் பெறப்படவில்லை. கம்பளைண்ட் செய்த நாளிலிருந்து மீண்டும் 25வது நாள் ஒரு ஈமெயிலை மறுபடியும் அனுப்பிவைத்தேன்.

வங்கி ஏ.ஜி எம்.ன் நேர்முக உதவியாளர் தொலைபேசி வழியாக என்னிடம் நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தல் :

மேலும் 5 நாள் கழித்து 31-வது நாள் மிகப்பெரிய நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியின் சென்னை அலுவலகத்தில் இருந்து ஏஜிஎம் அவர்களின் உதவியாளர் என்னை அழைத்தார். ஏஜிஎம் அவர்களே என்னிடம் பேச தயாராக இருப்பதாகவும், அவருக்கு இந்தி மட்டுமே தெரிந்த காரணத்தினால் அவருடைய நேர்முக உதவியாளராக தான் பேசுவதாகவும் பெண் அதிகாரி என்னிடம் பேசினார். நானும் அவரிடம் வங்கியில் எனக்கு ஏற்பட்ட அன்றைய நிலையையும், பணம் இருந்தும்,உரிய நேர்தத்திற்கு சென்றும் நகையை திருப்ப முடியாமல் போனபோது எனது மன உளைச்சலையும், எனது குடும்பத்தில் ஏற்பட்ட மன வருத்தங்களையும் , தேவையில்லாமல் நாங்கள் அலைந்த தகவலையும் தெளிவாக எடுத்துக் கூறினேன். பெண் அதிகாரி அவர்களும் என்னிடம் 9:30 மணிக்கு வந்து அட்டையை கொடுத்து ஒரு மணிக்கு மேல் நகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எ எந்த விதிகளும் இல்லை. எந்த இடத்திலும் நாங்கள் அப்படி சொல்ல சொல்லவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் வங்கி அதிகாரியின் தவறுக்காக தான் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக என்னிடம் கூறினார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

இனி வரும் காலங்களில் காலை 9.30 மணிக்கு வர சொல்ல மாட்டோம் என்று வங்கி அதிகாரி உறுதி மொழி அளித்தல் :

மீண்டும் என்னிடம் வங்கி மேலாளர் அவர்கள் நாளை பேசுவதாக தெரிவித்தார்.மறுநாள் மேலாளர் அவர்கள் என்னை மீண்டும் தொடர்பு கொண்டார்கள். அப்போது அவர்களிடம் நடந்த விவரங்களை எடுத்துக் கூறினேன் . எனது செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று வங்கி அதிகாரி என்னிடம் தெரிவித்தார்.இந்த கம்பளைண்ட்டை இத்துடன் முடித்துக் கொள்வோம். இனி வருங்காலகளில் இதுபோன்று நடக்காது என்று என்னிடம் தெரிவித்தார்கள்.

அப்போது அவரிடம் பல்வேறு தகவல்களை விளக்கினேன். காலை ஒன்பது முப்பது மணிக்கு வந்த தான் நகையை பெற்றுக்கொள்ளவேண்டும். ஒரு மணிக்கு மேல்தான் நகையை பெற்றுக்கொள்ளலாம் .அட்டையை 9:30 மணிக்கு வந்து கொடுக்க வேண்டும் என்கிற விதிகளை தாங்கள் வங்கியின் முன்பாக எழுதிப் போடுங்கள் . அல்லது அந்த தகவலை தெளிவுபடுத்துங்கள். விதி அப்படி இருந்தால் நான் அதனை ஒத்துக் கொள்கிறேன். என்று கூறினேன். அது போன்ற விதிகள் எதுவும் இல்லை. என்றும், நகை திருப்ப காலை 9.30 மணிக்கெல்லாம் வரவேண்டும் என்று இனி வரும் காலங்களில் சொல்ல மாட்டோம் என்றும் தெரிவித்தார்கள்.

30 நாட்களுக்கு மேல் பதில் வராததால் ஓம்புட்ஸ்மேன் செலுத்தல் :

நான் அதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவில்லை. நான் கம்பளைண்ட் செய்து 30 நாட்களுக்கும் மேலாகி விட்டதால் எனக்கு ஏதேனும் ஒரு முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக ஓம்புட்ஸ்மன் சென்று கம்ப்ளைன்ட் செய்துள்ளேன் என்கிற தகவலையும் அவரிடம் தெரிவித்தேன். அவர்களோ ஓம்புட்ஸ்மேன் வரை செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் 30 நாட்களுக்கும் மேலாக தங்களிடமிருந்து பதில் வராத காரணத்தினால் நான் ஓம்புட்ஸ்மன் சென்று விட்டேன் என்று தெரிவித்தேன்.

வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் கம்பளைண்ட் செய்து 30 நாட்களுக்கும் மேலாக பதில் வராத நிலையில் இணையம் வழியாகவே ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவுக்கு தங்களது காம்ப்ளயின்டை ஓம்புட்ஸ்மேனுக்கு விண்ணப்பிக்கலாம்.

எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்ற வாடிக்கையாளருக்கு ஏற்ப்படக்கூடாது :

வங்கி அதிகாரி அவர்களோ ஓம்புட்ஸ்மேன் செல்ல வேண்டாம், அதனை வித்ட்ரா பண்ணிக் கொள்ளுங்கள் என்று என்னிடம் தெரிவித்தார். நானோ இல்லைங்க சார், விதிகளில் எதுவும் இல்லாமல் வரக்கூடிய பொதுமக்களை தாங்கள் இதுபோன்ற அலைக்கழிப்பது எந்த விதத்தில் நியாயம் என்று அவரிடம் கேட்டேன். படிக்கத் தெரிந்த, தகவல் தெரிந்த எங்களுக்கே தாங்கள் இதுபோன்று தகவல் கூறினால், படிக்காத பாமர மக்கள் வரும் பொழுது அவர்களை எப்படியெல்லாம் தாங்கள் வேதனைப்படுத்துவீர்கள் என்கிற தகவலையும் பதிவு செய்தேன். நிறைவாக மீண்டும் வங்கியின்ஏ .ஜி .எம் அவர்களின் நேர்முக உதவியாளர் என்னிடம் தொடர்பு கொண்டு ஓம்புட்ஸ்மேன்க்கு அனுப்பி உள்ள கடிதத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார். நான் அதற்கு சம்மதிக்கவில்லை. ஆன்லைன் வழியாக நான் கம்ப்ளைன்ட் செய்து உள்ளேன். எனவே நான் அதை மறுபடியும் திரும்பப் பெற முடியாது என்று தெரிவித்து விட்டேன்.

வங்கி மேலாளர் மீண்டும் வருத்தம் தெரிவித்தல் :

அதன் தொடர்ச்சியாக இரண்டு மூன்று நாட்கள் கழித்து வங்கியில் ஏற்பட்ட செயல்பாடுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாக, வருந்துவதாக நாட்டுடமையாக்கப்பட்ட மிகப்பெரிய வங்கியின் மேலாளர் அவர்கள் எனக்குத் கடிதம் அனுப்பினார்கள்.

எதற்காக இந்த பதிவு ?

இந்த தகவலைபடிக்கும் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், மிகப்பெரிய நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் 9:30 மணிக்கு எல்லாம் சென்று யாரும் அட்டை கொடுக்க வேண்டிய தேவையில்லை. மதியம் ஒரு மணிக்கு மேல் தான் நகையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற தேவையுமில்லை. அவர்களுக்கு ஏதேனும் நிர்வாக கோளாறுகள் இருந்தால் அந்த நேரத்தில் நாம் சிறிது நேரம் காத்திருக்கலாம். ஆனால் நீண்ட நேரம் காத்திருப்பது, பணத்தைப் பெறுவதில், பணத்தைக் கட்டி நகையை பெறுவதில் காலதாமதம் ஏற்படுத்துவது வங்கியின் தவறு என்றுதான் வங்கியின் உயர் அதிகாரிகள் அனைவரும் தெரிவிக்கிறார்கள். இனி வரும் காலங்களில் தங்களுக்கு இது போன்று ஒரு நிலை ஏற்படுமானால் அதனை சரிசெய்து கொள்ளுங்கள்.

கடனை முடித்த உடன் ஸ்டேட்மென்ட் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள் :

மேலும் நகை கடனோ, பர்சனல் லோனோ எந்த கடனையும் முடிப்பதற்கான ஸ்டேட்மெண்ட் ஒன்று அனைவரும் பெற்றுக்கொள்ளுங்கள். எனக்கு நகை முடித்த ஸ்டேட்மெண்ட் வேண்டும் என்று அந்த வங்கியின் மேலாளர் அவர்களிடம் தகவல் தெரிவித்தேன் . அவர்கள் வங்கி அலுவலர் அவர்களை கூப்பிட்டு சொன்னார்கள். அதற்கு வங்கி அலுவலர் என்னிடம் கூறினார், நீங்கள் பணம் கட்டி விட்டீர்கள், நாங்கள் நகையை கொடுத்து விட்டோம், அப்படி என்றால் இந்த பேப்பரை நாங்கள் கிழித்துப் போட்டு விடுவோம், அப்புறம் எதற்கு உங்களுக்கு பணம் செலுத்தியதற்கான, நகையை மீட்டு அதற்கான ரசீது வேண்டும் என்று என்னிடம் வினவினார்,அப்பொழுது நான் சொன்னேன் , அது சரியான நடைமுறை இல்லை, என் லோன் முடிவடைந்து விட்டது என்றால் அதற்காக ஒரு ஸ்டேட்மென்ட் கொடுப்பது தான் சரியானது என்று தெரிவித்தேன். அதன்பிறகு வங்கி மேலாளர் அவர்கள் தலையிட்டு எனக்கு அந்த ஸ்டேட்மெண்ட் பெற்றுக் கொடுத்தார்கள். ஒரு ஸ்டேட்மென்ட் பெறுவதற்கு கூட நாட்டுடமையாக்கப்பட்ட வங்கியில் நாம் எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை இங்கே பதிவு செய்கின்றேன்.

தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் வழியாக உங்கள் குறைகளை பதிவு செய்யலாம் : அலைய வேண்டிய தேவை இல்லை :

வங்கியில் தங்களுக்கு ஏற்படும் மன உளைச்சலுக்கும்,தேவையில்லாமல் அலைய விடுவதற்கும்,மரியாதை குறைவாக நடத்துவதற்கும் வாடிக்கையாளர்கள் வேதனை மட்டும் படமால் அவர்களை எங்கு கம்பளைட் செய்ய வேண்டுமோ அங்கு தொடர்பு கொண்டால் இனி வரும் வடிக்கையாளரிடமாவது இது போன்று நடக்க அச்சப்படுவார்கள்.இதனைத்தான் நாம் செய்ய வேண்டும்.நமக்கு நடந்து விட்டது,இனி வரும் வாடிக்கையாளருக்கு இது போன்று நடக்க கூடாது என்பதே நமது நோக்கம்.இந்த பதிவும் அதற்காகத்தான்.தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இணையம் வழியாக உங்கள் குறைகளை பதிவு செய்யலாம் . வங்கிக்கு நேரில் சென்று அலைய வேண்டிய தேவை இல்லை.உங்களது குறைகள் சரியானதாக இருந்தால் வங்கி அதிகாரி உங்களை தேடி வருவார். நன்றி.

M.S.லெட்சுமணன்
காரைக்குடி

Leave your comments here...