வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு.!

இந்தியாஉலகம்

வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு.!

வேளாண் சட்டங்களுக்கு அமெரிக்கா ஆதரவு.!

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் சர்வதேச பிரபலங்கள் பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டனர்.டுவிட்டரில் விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியவர்களில் பாப் நட்சத்திரம் ரிஹானா, சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் அமெரிக்க துணைத் தலைவர் கமலா ஹாரிஸின் வழக்கறிஞர் மருமகள் மீனா ஹாரிஸ் ஆகியோரும் அடங்குவர்.அமெரிக்க பாடகி ரிஹானா, விவசாயிகளின் போராட்டம் பற்றிய செய்தியை பகிர்ந்து, ‘ஏன் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.அதேபோல், சுற்றுச்சூழல் ஆர்வலரான சுவீடன் நாட்டை சேர்ந்த 18 வயதான கிரேட்டா தன்பெர்க், ‘போராடி வரும் இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம்’ என பதிவிட்டார்.

இந்த நிலையில் இந்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு, அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்த பிரச்னை குறித்து, நிருபர்களின் கேள்விக்கு, அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் அளித்துள்ள பதில்:அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்துவது, ஜனநாயகத்தின் தனிச் சிறப்பாகும். இதைத் தான், இந்திய உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. எந்த பிரச்னைக்கும் பேச்சின் மூலம் தீர்வு காண முடியும்.

இந்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களை, அமெரிக்கா வரவேற்கிறது. விவசாய துறை சந்தையின் செயல்திறனை அதிகரிக்கும், அதிக அளவு தனியார் முதலீடுகளை ஈர்க்கும் எந்த நடவடிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது. அதுபோன்றே, இந்த சட்டங்கள் அமைந்துள்ளன.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...