புதிய நாடாளுமன்ற திட்டம் தேவையற்றது – பிரதமருக்கு முன்னாள் அதிகாரிகள் 69 பேர் கடிதம்.!

இந்தியா

புதிய நாடாளுமன்ற திட்டம் தேவையற்றது – பிரதமருக்கு முன்னாள் அதிகாரிகள் 69 பேர் கடிதம்.!

புதிய நாடாளுமன்ற திட்டம் தேவையற்றது – பிரதமருக்கு முன்னாள் அதிகாரிகள் 69 பேர் கடிதம்.!

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்துக்கு பிரதமர் மோடி கடந்த 10ந்தேதி அடிக்கல் நாட்டினார்.

டெல்லியில் நாடாளுமன்றம் செயல்பட்டு வரும் தற்போதைய கட்டிடம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டிபுதிய நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது.இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படும்.

இந்நிலையில், இத்திட்டம், அது செயல்படுத்தப்படும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பகிரங்க கடிதம் எழுதியுள்ளனர். அரசியல் சாசன நடத்தை குழு என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், 69 ஓய்வுபெற்ற அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

அக்கடிதத்தில் அவர்கள், ‘நாடு கடினமான பொருளாதார சூழலில் இருக்கும்போது, கொரோனா தொற்றால் லட்சக்கணக்கானோர் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கும்போது, பகட்டு, படாடோபத்தை காட்டும் ஒரு திட்டத்துக்கு அரசு இவ்வளவு பெரும் தொகையை செலவிடுவது ஏன்? இந்த திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே, அதிகாரிகளின் அதிகாரத்தனம்தான் தென்படுகிறது.

இத்திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டவிதமும் கவலையை ஏற்படுத்துகிறது. மேலும், நாடாளுமன்ற கட்டிடத்துக்கு முறைப்படி ஜனாதிபதிதான் அடிக்கல் நாட்டியிருக்க வேண்டும். தவிர, இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது அடிக்கல் நாட்டப்பட்டது நீதிமன்றத்தை மீறிய செயல்’ என்று தெரிவித்துள்ளனர்.இந்த திட்டத்திற்கு ரூ.13,450 கோடி என திருத்தியமைக்கப்பட்ட திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. புதிய நாடாளுமன்ற திட்டம் வீணானது மற்றும் தேவையற்றது என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஜவகர் சர்கார், ஜாவித் உஸ்மானி, சக்சேனா, அருணா ராய் உள்ளிட்ட 69 பேர் கையெழுத்திட்டும் உள்ளனர்.

Leave your comments here...