குமரி மாவட்டத்தில் கனமழை: பல ஏக்கர் விவசாயம் நீரில் மூழ்கியது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

சமூக நலன்

குமரி மாவட்டத்தில் கனமழை: பல ஏக்கர் விவசாயம் நீரில் மூழ்கியது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

குமரி மாவட்டத்தில் கனமழை: பல ஏக்கர் விவசாயம் நீரில் மூழ்கியது: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

குமரி மாவட்டத்தில் கனமழையால் பல இடங்களில் குடியிருப்புகள், வாழை தோட்டம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இரணியல், குளச்சல், புத்தேரி, புளியடி, சுசீந்திரம், தக்கலை, திருவட்டார், விளவங்கோடு, கல்குளம் உள்பட பல பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

All Pitures  for : Gokul PSV

கன மழையால் வள்ளியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வில்லுக்குறி அருகே புலியூர்குறிச்சி பகுதியில் வயல்வெளி மற்றும் வாழை தோட்டங்களுக்குள் ஆற்றுவெள்ளம் புகுந்தது. இதில் பல ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் மற்றும் வாழைகள் சேதமடைந்தன. இதனால், விவசாயிகளுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குளச்சல் பகுதியில் பெய்த கனமழையால் ஏ.வி.எம். கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. குளச்சல் ஜிம்மா பள்ளி வாசல் வளாகத்தை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மோட்டார் மூலம் வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குழித்துறையில் உள்ள தடுப்பணை மீது 3 அடி உயரத்திற்கு ேமல் வெள்ளம் பாய்ந்து ஓடியது. இதனால், தடுப்பணை மீது இருசக்கர வாகனங்கள் செல்லவும், பொது மக்கள் நடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது.குலசேகரம், திற்பரப்பு, பொன்மனை, பேச்சிப்பாறை போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. மலையோர பகுதியில் பெய்த கனமழையால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிறுவர் நீச்சல் குளம், கல்மண்டபம் ஆகியவற்றை வெள்ளம் மூழ்கடித்து சென்றது.மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி- சிதறால் மலைக்கோவில் சாலையில் வள்ளக்கடவு பகுதியில் சுமார் 1½ அடி உயரத்துக்கு மேல் மழைவெள்ளம் தேங்கியது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிதறால் மலை கோவிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், திக்குறிச்சி மகா தேவர் கோவிலுக்கு சென்றவர்கள் மற்றும் முந்திரி ஆலை, செங்கல்சூளைக்கு சென்ற தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதேபோல இரணியலுக்கும், வீராணி ஆளூருக்கும் இடைப்பட்ட பகுதியில் மழை வெள்ளம் பெருக்கெடுத்ததால் அப்பகுதியில் உள்ள ரெயில் தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் மின்சார ரெயில் என்ஜின்களுக்கான மின்சாரமும் தடைபட்டதாக கூறப்படுகிறது.இதனால் நாகர்கோவில்- திருவனந்தபுரம் ரெயில் வழித்தடத்தில் ரெயில்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்ேவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே காலையில் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டுச் சென்ற பயணிகள் ரெயில் ஒழுகினசேரி ெரயில்வே பாலம் அருகில் சென்று கொண்டிருந்த போது, என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடுவழியில் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது. தண்டவாளத்தில் தேங்கியிருந்த தண்ணீர் அப்புறப்படுத்தப்பட்டு, மின் வினியோகம் சீரானதும் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரெயில் மீண்டும் புறப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு இயக்கப்பட்டது. மேலும் அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

மேலும் ராஜாக்கமங்கலம், மேல சங்கரன்குழி பகுதிகளில் பல வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. நாகர்கோவில் பறக்கின்கால் மடத்தெருவில் ஒரு வீடு இடிந்து விழுந்தது. அதே போல் தோவாளை, திருவட்டார் உள்ளிட்ட பல இடங்களில் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. மழை வெள்ளம் சாலைகளில் ஓடுவதால் மாவட்டத்தின் பல பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக பல ஏக்கர் விவசாயம் மழை வெள்ளத்தால் பாதிப்பு உள்ளாகி உள்ளது..!

Comments are closed.