10 ஆண்டுகளில் ரயில் மோதி 186 யானைகள் பலி – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Scroll Down To Discover

தென்காசி பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் துறை கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 186 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக அசாமில் 62 யானைகளும், மேற்கு வங்கத்தில் 57 யானைகளும், ஒடிசாவில் 27 யானைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த எண்ணிக்கை 5 என கூறப்பட்டுள்ளது.

2012 – 13 ஆம் ஆண்டு காலகட்டங்களில் தான் அதிகபட்சமாக 27 யானைகள் இந்தியா முழுவதும் ரயில் மோதி உயிரிழந்துள்ளதும் இந்த தகவலில் தெரியவந்துள்ளது.யானைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 213 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.

அதே சமயம் தமிழ்நாட்டில் 2009 முதல் 2021 வரையிலான கால கட்டங்களில் ஐந்து யானைகள் மட்டும் தான் ரயில் மோதி உயிரிழந்ததாக மத்திய வனத்துறை கூறியுள்ள தகவலும், தென்னக ரயில்வே மற்றும் தனியார் அமைப்புகள் முன்னர் அளித்த தகவல்களும் மாறுபட்டு உள்ளதாக சூழலியல் ஆர்வலர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர்