ஹெலிகாப்டர் விபத்து: மேலும் 2 ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டன

Scroll Down To Discover

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த 8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் ஆகிய 3 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டு நேற்று தகனம் செய்யப்பட்டன. டிஎன்ஏ மரபணு பரிசோதனை மூலம் 3 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு நேற்று முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டன.

அதேவேளை, இந்த கோர விபத்தில் ராணுவ அதிகாரிகள், விமானப்படை ஊழியர்களின் உடல்கள் முழுவதும் எரிந்துள்ளதால் உடல்களை அடையாளம் காண்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட உறவினரிடம் உடலை ஒப்படைக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பிபின் ராவத்தின் தனிப்பாதுகாவலர்களான லான்ஸ் நாயக் பி சாய் தேஜா, லான்ஸ் நாயக் விவேக் குமார் ஆகிய இரு ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும், விமானப்படையை சேர்ந்த 4 அதிகாரிகளின் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது. அடையாளம் காணப்பட்ட 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனை தொடர்ந்து 6 வீரர்களில் உடல்களும் முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம் செய்யப்பட்ட உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த எஞ்சியோரின் உடல்களை மரபனு பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.