ஹிஜாப்புக்கு எதிரான போராட்டம் : ஈரான் பெண்களுக்கு ஆதரவாக கேரளாவில் ஹிஜாப்புக்கு தீ வைத்து எரித்து போராட்டம்..!

Scroll Down To Discover

இஸ்லாமிய மத சட்டங்களை கடுமையாக பின்பற்றி வரும் ஈரானில் பெண்கள் மற்றும் 9 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்நாட்டின் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியவில்லை என கூறி போலீசார் நடத்திய தாக்குதலில் கோமா நிலைக்கு சென்ற 22 வயதான மாஷா அமினி என்ற இளம்பெண் கடந்த செப்டம்பர் மாதம் 17-ந்தேதி உயிரிழந்தார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் போராட்டத்தில் குதித்தனர். ஹிஜாப்பை கழற்றி வீசியும், ஹிஜாப்பை தீ வைத்து எரித்தும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவியது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அவர்களை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 154 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளனர். அவர்களை கட்டுப்படுத்த ராணுவ படைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த போராட்டம் உலக அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. சுவீடன் நாட்டு பெண் எம்.பி. அபிர் அல் சஹ்லானி தனது தலைமுடியை வெட்டி போராட்டத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தி உள்ளார்.
https://twitter.com/ANI/status/1589522045926526976?s=20&t=a97YCBd9Yfsyu6MxEW1Lsw
ஈரானில் இளம்பெண் அமினி மரணத்திற்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக, கேரளாவின் கோழிக்கோடு நகரில் ஹிஜாப்புக்கு தீ வைத்து எரிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதன்படி, போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் என பலரும் ஈரானின் அமினி மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோஷம் எழுப்பினர். அந்த கூட்டத்தில் இருந்த இளம்பெண் ஒருவர் தான் அணிந்திருந்த தனது ஹிஜாப்பை கழற்றினார். பின்னர், அதற்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றியிருந்தவர்கள் போராட்டத்திற்கு ஆதரவான கோஷங்களை எழுப்பினர்.