ஸ்விக்கி, ஸொமேட்டோ ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களை ஜி.எஸ்.டி வரியின் கீழ் கொண்டு வர திட்டம்

Scroll Down To Discover

உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில், நாளை நடைபெற உள்ள ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், ஓட்டல்களிலிருந்து வீடுகளுக்கு உணவு ‘சப்ளை’ செய்யும், ‘ஸ்விக்கி, ஸொமேட்டோ’ போன்ற உணவு சேவை நிறுவனங்களை ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து, விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அப்படி கொண்டு வந்தால், ‘ஆன்லைன்’ வாயிலாக நாம் வாங்கும் உணவுகளுக்கான ஜி.எஸ்.டி.,யை உணவகங்களிடம் இருந்து பெற்று, அதை உணவு சப்ளை செய்யும் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்தும். இதனால், தற்போதுள்ள விலை உயர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

மேலும், வீட்டில் சமையல் மட்டும் செய்து அதை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யும், ‘கிளவுட் கிச்சன்’ தொழில் செய்வோரும், உணவக சேவை வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு, அவர்களுக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய தயாரிப்புகளின் விற்பனையை ஜி.எஸ்.டி வரம்புக்குள் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இதுகுறித்தும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.