கொரோனா அச்சுறுத்தலையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதால், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க முடியாமல் போகிற சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டும் வெளியூர்களுக்கு பயணிக்கும் தேவையில் இருந்தால் மட்டும் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்:- இந்த நேரத்தில் சென்னை நகருக்குள்ளே ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காகவும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கு 3 முக்கியமான காரணங்களுக்காக அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது.நெருங்கிய உறவினர்கள் இறப்புக்கும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் திருமணத்துக்கும் மற்றும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்வதற்கு மட்டும் இந்த அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. இதர தேவைகளுக்கு அனுமதி கேட்டால் அனுமதி கிடைக்காது.மேலும் இந்த 3 முக்கிய காரணங்களுக்காக செல்பவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நேரில் வந்தும் விண்ணப்ப மனுக்களை கொடுக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் நேரில் கமிஷனர் அலுவலகம் வந்து காத்து கிடக்க தேவை இல்லை. அவர்களது கோரிக்கை நியாயமானது என்று தெரிந்தால், அவர்கள் நேரில் அழைக்கப்படுவார்கள்.நேரில் அழைக்கப்படும்போது, விண்ணப்பித்தவர்கள் முதலில் தங்களது அடையாள அட்டையை காட்ட வேண்டும். அடுத்து தாங்கள் வெளி ஊர் செல்வதற்கான காரணம் சம்பந்தப்பட்ட ஆவணங் களை சமர்ப்பிக்க வேண்டும்.திருமணத்துக்கு செல்பவர்கள் திருமண பத்திரிகையை காட்டலாம். மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள், உரிய மருத்துவரின் பரிந்துரை சீட்டை காட்ட வேண்டும்.
இதுவரை 9 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. வெளிமாவட்டங்களில் இருந்து சென்னை வருபவர்கள் டி.ஜி.பி. அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். அல்லது அந்த மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுக்கலாம்.வெளிமாநிலங்களில் இருந்து சென்னை வருபவர்கள், அந்த மாநில போலீசாரிடம் அனுமதி சீட்டு பெற்று வந்தால் அனுமதிக்கப்படுவார்கள். கமிஷனர் அலுவலகத்தில், விண்ணப்பம் கொடுக்க வருபவர்கள், உரிய இடைவெளி விட்டு வரிசையில் நின்றுதான் வருகிறார்கள்.
மேலும், சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கும், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருவதற்கும் அனுமதி வழங்குமாறு இதுவரை 9000 மின்னஞ்சல்கள் வந்துள்ளதாகக் கூறினார்.
Leave your comments here...