வீட்டை மின் விளக்குகளால் அலங்கரிக்க சட்ட விரோதமாக மின்சார திருட்டு… வெளியான வீடியோ – முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது வழக்கு..!

Scroll Down To Discover

கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத மாநில தலைவருமான குமாரசாமி மீது மின்சாரம் திருடியதாக பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கர்நாடக முன்னாள் முதல்வரும்,மஜத மாநில தலைவருமான‌ குமாரசாமி பெங்களூருவில் உள்ள ஜே.பி.நகரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். தீபாவளி பண்டிகையொட்டி அவரது வீடு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்காக மின் கம்பத்தில் இருந்து சட்ட விரோதமாக மின்சாரம் திருடப்பட்ட வீடியோ வெளியானது.

இந்த வீடியோவை காங்கிரஸார் சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ‘‘மின்சாரத்தை திருடும் அளவுக்கு ஏழ்மையில் வாடும் குமாரசாமி, இலவச மின்சார திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்’’ என விமர்சனம் செய்த‌னர். அவரது வீட்டை சுற்றி ‘மின்சார திருடன்’ என போஸ்டர் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘‘குமாரசாமி மீது மின் வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்தார்.இதைத் தொடர்ந்து மின் வாரிய ஊழியர்கள் குமாரசாமியின் வீட்டுக்கு சென்று மின்சார திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டனர். ஜே.பி.நகர் காவல்நிலையத்தில் மின்சாரம் திருடியதாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸார் ச‌ட்டவிரோத மின் இணைப்பு மூலம் மின்சாரத்தை திருடியதாக குமாரசாமி மீது இந்திய மின்சார சட்டம் 135-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து குமாரசாமி கூறும்போது, “இந்த தவறுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் மீது போடப்பட்ட வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வேன். அரசின் சொத்தை ஒருபோதும் அபகரிக்க மாட்டேன். எனது வீட்டை அலங்கரித்த பணியாளர்கள் தவறுசெய்துள்ளனர். இந்த சின்ன விஷயத்தை காங்கிரஸார் அரசியலாக்கி, எனக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவேன்” என்று தெரிவித்தார்.