வீட்டு பணிப்பெண் சித்ரவதை – பல்லாவரம் திமுக எம்எல்ஏ மகன் மீது வழக்குப்பதிவு..!

Scroll Down To Discover

திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்தபோது, அவ்வீட்டின் உரிமையாளரர்களான கணவன், மனைவி தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியதாகவும் கூறி 18 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ளதாக நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: கடந்த ஜன.16 அன்று உளுந்தூர்பேட்டை, அரசு மருத்துவமனையில் இருந்து கொடுத்த தகவலின் பேரில், மேற்படி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு சுமார் 18 வயது பெண் வந்திருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும், சென்னை – திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்ததாகவும் தெரிவித்தனர். அதன்பேரில், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான மகளிர் காவல் குழுவினர், உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்று மேற்படி பெண்ணிடம் விசாரணை செய்தனர்.

விசாரணையில் அப்பெண் கூறும்போது, தான் திருவான்மியூரில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வந்ததாகவும், அவ்வீட்டின் உரிமையாளரர்களான கணவன், மனைவி தன்னை அசிங்கமாக பேசியும், அடித்தும் காயப்படுத்தியதாக தெரிவித்தார். மேலும், இது குறித்து, மேற்படி பெண் கொடுத்த புகார் மீது நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளது. எனினும், அந்த வீட்டின் உரிமையாளர்கள் பெயர்களை காவல் துறையினர் குறிப்பிடவில்லை.

பின்னணி என்ன? – உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த 18 வயதுடைய 12-ம் வகுப்பு படித்த இளம்பெண் ஒருவரை, குடும்பச் சூழல் காரணமாக அவரது பெற்றோர் சென்னையை அடுத்த பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏவான இ.கருணாநிதியின், மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில், வீட்டு வேலை செய்ய 7 மாதங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்துள்ளனர். திருவான்மியூர், 7-வது அவென்யூவில் வசித்து வந்த ஆண்ட்ரோவும், அவரதுமனைவி மெர்லினாவும் அந்த இளம்பெண்ணை வேலை வாங்குகிறோம் என்ற பெயரில் கொடுமைப்படுத்தியதாகவும், அவரது கை, கன்னம், முதுகு உட்பட பல்வேறு இடங்களில் சூடு வைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. வேலை பிடிக்கவில்லை ஊருக்குப் போகிறேன் என கிளம்பிய அந்தப் பெண்ணை அனுப்ப மறுத்து கட்டாயப்படுத்தி தங்க வைத்துள்ளனர்.

மேலும்,பேசியபடி சம்பளத்தையும் கொடுக்கவில்லை. இதுகுறித்து வெளியே சொன்னால் அவரது குடும்பத்தினரை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பொங்கலையொட்டி ஊருக்குச் சென்ற அந்தப் பெண், பெற்றோரிடம் நிலைமையைக் கூறி கதறி அழுதுள்ளார். உடல் முழுவதும் தீக்காயங்கள், தழும்புகள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்த பெற்றோர், மகளை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.