சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 4 ஆயிரத்து 930 மெட்ரிக் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என வகைப்படுத்தி பிரித்தெடுக்கப்படுகிறது. அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் மக்கும் குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கையான தரமான உரம் பொதுமக்களுக்கு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.பின்னர் இக்குப்பை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளிலிருந்து இயற்கை முறையில் உரம் தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பைகள் தனியாக பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வகையில் தகுந்த மறுசுழற்சியாளர்களிடம் வழங்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 139 நுண் உரமாக்கும் மையங்கள், 537 மூங்கில் தொட்டி உர மையங்கள் மற்றும் 175 சிறு தொட்டிகள், 1,711 உறை கிணறு மையங்கள், 21 புதைகுழி மையங்கள், 2 மண்புழு உர மையங்கள் ஆகியவற்றின் மூலம் மக்கும் குப்பைகளில் இருந்து தரமான இயற்கை உரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த உரங்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய ஏதுவாக மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 9445194802 என்ற செல்போன் எண் அல்லது வாட்ஸ்-அப் செயலியிலும் தொடர்பு கொள்ளலாம். வீட்டிற்கு வந்து உரம் வழங்கும் போது, அதற்கான தொகையை மாநகராட்சி பணியாளர்கள் பெற்றுக்கொள்வார்கள்.மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.