விழுப்புரம் மாணவி ஜெயஸ்ரீ கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராக வேண்டாம் என பார் கவுன்சிலுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கோரிக்கை விடுத்தது உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- விழுப்புரம் மாவட்டம் , சிறுமதுரையில் முன்விரோதம் காரணமாக , 10 ம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் ஆகியோரால் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் தெரிவித்திருந்தார். கைது செய்யப்பட்ட இருவரும் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்குமா எனும் சந்தேகம் பாதிக்கபட்ட குடும்பத்தினர் உட்பட அனைவருக்கும் ஐயம் உள்ளது.
உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயை தமிழக அரசு வழங்கியுள்ளது போதுமானதாக இல்லை. ஜெயஸ்ரீ குடும்பத்திற்கு ரூ 20 லட்சம் நிவாரண நிதி வழங்குவதோடு, பாரபட்சமில்லாத நியாயமான விசாரணை தமிழக அரசு நடத்தும் என்பதை உறுதி அளிக்க வேண்டும்.
மேலும் கொலை குற்றவாளிகள் இருவரும் வழக்கின் மூலம் வெளியே வருவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இது போன்ற இரக்கமற்ற கொலைகாரர்களின் வழக்கில் எந்த வழக்கறிஞர்களும் ஆஜராக கூடாது என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன். மேலும் இது போன்ற கொடூர சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என தமிழ்நாடு, புதுவை பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave your comments here...