சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு விலங்குகள் அல்லது கடல்வாழ் உயிரினங்கள் கடத்தப்படலாம் என கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் கடந்த திங்களன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது புறப்படும் பகுதியில் அட்டைப் பெட்டியுடன் ஒருநபர் சந்தேகப்படும் வகையில் நடமாடிக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர், குடிபெயர்வு சோதனைக்கு உட்பட்டு, பின்னர் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும் போதும் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டார்.
அவரது பாஸ்போர்ட் மற்றும் பயணச்சீட்டின் மூலம் அவரது பெயர் பஷீர் அகமது (31) என்பதும், இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லவிருந்ததும் தெரியவந்தது. அவரது அட்டைப்பெட்டி பற்றி விசாரிக்கப்பட்ட போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து, விரிவான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அட்டைப்பெட்டியை திறந்த போது, எட்டு கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் இழையிலான பை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் சுறா மீனின் செவிள் துடுப்புகள் என சந்தேகிக்கப்படும் பொருட்கள் இருந்தன.
https://youtu.be/ws5ze6iIVxo
இவற்றை வனவிலங்குகள் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து பதப்படுத்தப்பட்ட சுறாவின் செவிள் துடுப்புகள் என சான்றிதழ் அளித்தனர். வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின்படி, இவற்றின் ஏற்றுமதி தடை செய்யப்பட்டிருப்பதால், ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள எட்டுகிலோ எடை கொண்ட சுறாவின் செவிள் துடுப்புகள் சுங்கத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் உள்ள உயர்நிலை உணவகங்களில் தயாரிக்கப்படும் சூப் மிகவும் விலை உயர்ந்ததாகும். நல்ல ஆரோக்கியம் அளிப்பதாகவும், வளத்தின் அடையாளமாகவும் இவற்றை சீனர்கள் கருதுகின்றனர். இவ்வாறு சுறா மீனின் செவிள் துடுப்புகள் அகற்றப்படுவது அவற்றின் இனப்பெருக்கத்தை குறைத்துவிடும். மேலும் சுறா மீன் செவிள் துடுப்புகள் பறிமுதல் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...