உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் அங்கு ரோஹிட் நகரில் போலி கோவிஷீல்டு, ஜைகோவ்-டி தடுப்பூசிகளும், போலி கொரோனா பரிசோதனை கருவிகளும் தயாரிக்கப்படுவதாக போலீஸ் தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் லங்கா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட குறிப்பிட்ட இடத்தை போலீஸ் தனிப்படையினர் சுற்றி வளைத்தனர்.
அதைத் தொடர்ந்து நடத்திய அதிரடி சோதனையில் அங்கு ரூ.4 கோடி மதிப்பிலான போலி கோவிஷீல்டு, ஜைகோவ்-டி தடுப்பூசிகளும், போலி கொரோனா பரிசோதனை கருவிகளும், குப்பிகளும் இருப்பதை கண்டறிந்து அவற்றை போலீஸ் தனிப்படையினர் கைப்பற்றினர்.மேலும் இது தொடர்பாக ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, லக்ஷ்யா ஜாவா (டெல்லி), ஷாம்சர் (பாலியா), அருணேஷ் விஷ்வகர்மா ஆகிய 5 பேரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இவர்களில் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, அருணேஷ் விஷ்வகர்மா ஆகிய 3 பேரும் வாரணாசியை சேர்ந்தவர்கள். முதல் கட்ட விசாரணையில் ராகேஷ் தவானி, சந்தீப் சர்மா, ஷாம்சர். அருணேஷ் விஷ்வகர்மா ஆகிய 4 பேரும் போலி தடுப்பூசிகளையும் பரிசோதனை கருவிகளையும் தயாரித்து லக்ஷ்யா ஜாவாவுக்கு வினியோகம் செய்து வந்ததும், அவர் பிற மாநிலங்களுக்கு தனது கும்பல் மூலம் அவற்றை வினியோகித்து வந்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது. இந்த சம்பவம், வாரணாசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave your comments here...