வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு – சென்னைக்கு கடைசி இடம்

Scroll Down To Discover

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வருகிறது. வாக்காளர்கள் இடம் மாறி செல்லும்போது பழைய இடத்தில் உள்ள வாக்குரிமையை நீக்காமல் புதிதாக விண்ணப்பித்து பட்டியலில் சேர்ந்து விடுகின்றனர். இதனால் இரட்டை வாக்குரிமை பெறும் சூழல் உள்ளது.

இது போன்ற இரட்டைப்பதிவை நீக்குவதற்கு வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்காளர்களும் தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் இணைத்து சரிபார்க்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இருந்தபோதும் பெரும்பாலான மாவட்டங்களில் ஆதார் எண் இணைப்பில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 38 லட்சத்து 66 ஆயிரத்து 626 வாக்காளர்கள் கொண்ட சென்னை மாவட்டத்தில் 31.83 சதவீத வாக்காளர்கள் மட்டுமே ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மாநில அளவில் ஆதார் இணைப்பு குறித்த பட்டியலில் 38வது கடைசி இடத்தில் சென்னை உள்ளது. அரியலூர் மாவட்டம் 97.12 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கள்ளக்குறிச்சி, தர்மபுரி, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் 81.88 சதவீத பணி முடிந்து விருதுநகர் மாவட்டம் 6-வது இடத்திலும், 68.06 சதவீதத்துடன் திண்டுக்கல் 21வது இடத்திலும், 66.21 சதவீதத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் 25வது இடத்திலும், 65.85 சதவீதத்துடன் சிவகங்கை 26-வது இடத்திலும், 56.57 சதவீதத்துடன் தேனி மாவட்டம் 31வது இடத்திலும், 54.42 சதவீதத்துடன் மதுரை மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளது.

வாக்காளர் பட்டியலில் ஆதாரை இணைக்க நாளை முதல் 2 நாட்கள் வீடு வீடாக ஆய்வு பணி நடைபெற உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 17 வாக்குச்சாவடி அலுவலர்கள் ஆதார் விபரங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். வாக்காளர் பட்டியலில் சேரும்போது ஆதார் விபரங்களை அளித்திருந்தாலும் அவை பட்டியலுடன் இணைக்கப்படவில்லை. முகவரி மற்றும் அடையாள சான்றுக்காக மட்டுமே ஆதார் பயன்படுத்தப்பட்டது. வாக்காளர்கள் விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து ஆதார் விபரங்களை அளித்தால் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படும். இதற்கு அனைத்து வாக்காளர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.