வங்கி மோசடியில் தப்பியோடிய நீரவ் மோடியின் சொத்துக்களை ஏலம்விட்டு பஞ்சாப் நேஷனல் வங்கி ரூ.24கோடியை மீட்டது..!

Scroll Down To Discover

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி அவரது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து, போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடினார். சிறிது காலம் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் லண்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

தற்போது லண்டனில் சிறையில் இருக்கும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தும் முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் அவருக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிராக நடைபெற்றுவரும் வழக்கில் புதிய திருப்பமாக, பகுதி கடன் தொகை மீட்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக் கட்டுப்பாட்டுக்குள் வரும் நீதிமன்றத்தில் நடைபெறும் பெருநிறுவன நிர்வாக வழக்கைத் தலைமை தாங்கி நடத்திய மத்திய கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் பணத்தை மீட்பதில் முதல் தவணையாக 3.25 மில்லியன் டாலரை மீட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.24.33 கோடியாகும். நீரவ் மோடியின் சொத்துகள் பணமாக்கப்பட்டு 11.04 மில்லியன் டாலர் அளவிற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பிணையில்லாக் கடன் கொடுத்தவர்களுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக தயாராக உள்ளது. இதர செலவினங்கள் கடன் கொடுத்த மற்ற வங்கிகளின் கோரிக்கைகளை பொறுத்து அடுத்தகட்ட மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.