வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை : சிறு,குறு நிறுவனங்களுக்கு கூடுதல் கடன் வழங்கவேண்டும் – முதல்வர் கோரிக்கை.!

Scroll Down To Discover

கொரோனா பாதிப்பு காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயம், சிறு,குறு தொழில்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, கடன் வழங்குவது குறித்து வங்கி அதிகாரிகளுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய முதலமைச்சர்:- கொரோனாவில் இருந்து தமிழகத்தில் தான் அதிகம் பேர் குணமடைகின்றனர். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க வங்கிகளின் ஒத்துழைப்பு அவசியம். வங்கிகள் சிறப்பு முகாம்கள் மூலம் உழவர் கடன் அட்டைகளை வழங்க வேண்டும்.


மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு உள்ளதால், டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி தடையின்றி நடைபெறும் என கூறிய முதலமைச்சர், ஊரகத் தொழில்களை மேம்படுத்தவும், புதிய தொழில்களைத் தொடங்கவும் 300 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை, தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருப்பதாக, முதலமைச்சர் குறிப்பிட்டார்.மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை பிணையில்லா கடன் வழங்கப்படும் எனவும், விவசாயத்திற்கான கடனை உடனடியாக வழங்க வேண்டும். தமிழகத்தில் 5 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களுக்கு உடனடி தேவை கடன் தான். இதனால் கூடுதல் கடன் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு வங்கி அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்