லிங்கபைரவியில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம்..!

Scroll Down To Discover

விஜயதசமி தினமான இன்று (அக்.5) ஈஷா யோகா மையத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் லிங்கபைரவியில் ‘வித்யாரம்பம்’ செய்து கொண்டனர்.

நம்முடைய பாரத கலாச்சாரத்தில் கல்வி மற்றும் பல்வேறு விதமான கலைகளை கற்க விரும்பும் குழந்தைகள் விஜயதசமி தினத்தன்று ‘வித்யாரம்பம்’ மேற்கொள்வது வழக்கம். அதன்படி, ஈஷாவில் உள்ள லிங்கபைரவியில் இன்று மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் முள்ளாங்காடு, முட்டத்துவயல், செம்மேடு, இருட்டுப்பள்ளம், நரசீபுரம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, காளம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் லிங்கபைரவி தேவியின் முன்னிலையில் வித்யாரம்பம் செய்து கொண்டனர்.

சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக ஈஷா அவுட்ரீச் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. சந்தேகவுண்டம்பாளையத்தில் செயல்படும் ஈஷா வித்யா மெட்ரிக் பள்ளியில் 69 பழங்குடி குழந்தைகள் முழு இலவச கல்வி பெறுகின்றனர். மேலும், அரசு பள்ளிகளில் படிக்கும் பழங்குடி குழந்தைகளுக்கு தினமும் இலவச போக்குவரத்து வசதியும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவிதொகையும் ஈஷா வழங்கி வருகிறது. இதனால், பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.