லாரிக்குள் நடமாடும் திருமண மண்டபம் – பாராட்டிய ஆனந்த் மகேந்திரா

Scroll Down To Discover

மகேந்திர நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர். தனித்துவமான விஷயங்கள், சாதனைகளை கண்டறிந்து அதற்கு பாராட்டுகளையும் வெகுமதிகளையும் இவர் தொடர்ந்து வழங்கிவருகிறார்.

அப்படி தான் சமீபத்தில் ஒரு வித்தியாசமான முயற்சியைப் பாராட்டி கவனத்தை ஈர்த்துள்ளார் ஆனந்த் மகேந்திரா. இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ போஸ்ட் ஒன்றைப் பகிர்ந்துள்ளார். டரேகார் இவன்ட்ஸ் என்ற நிறுவனம் குறித்த வீடியோ இது. இந்த நிறுவனம் நடமாடும் திருமண மண்டபத்தை உருவாக்கி அனைவரையும் அசத்தியுள்ளது. அந்த இரண்டு நிமிட வீடியோவானது, ஒரு பெரிய லாரி சாலையில் பயணிப்பதிலிருந்து தொடங்குகிறது.

அந்த லாரி கண்டெய்னர் திறக்கும் போது அதில் இருந்து தான் இந்த நடமாடும் திருமண மண்டபம் வெளியே வருகிறது. 40க்கு 30 அடி பரப்பளவில் சுமார் 200 பேர் பங்கேற்கும் விதமாக இந்த நடமாடும் திருமண மண்டபம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகான இன்டீரியர் டிசைன்களுடன் உள்ள இந்த திருமண ஹாலில் இந்த மாதம் 7ஆம் தேதி ஒரு திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணத்தின் கிளிப்பிங்களும் இந்த வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சியை ஆனந்த் மகேந்திரா வெகுவாக பாராட்டியுள்ளார்.


அவர் தனது ட்விட்டர் பதிவில்,அற்புதமான கிரியேட்டிவ் யோசனையுடன் இதை வடிவமைத்த நபரை நான் நேரில் சந்திக்க விரும்புகிறேன். இந்த நடமாடும் திருமண மண்டபம் நாட்டின் உள்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நல்ல ஆப்ஷனாக இருப்பதுடன் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு ஏதுவாகவும் இருக்கும். நெருக்கமான மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் நிரந்தமாக இடத்தை முடக்காமல், இப்படி நடமாடும் திருமணம் மண்டபம் உள்ளது சிறந்த யோசனை என ஆனந்த் மகேந்திரா பாராட்டியுள்ளார்.

ஆனந்த் மகேந்திராவின் இந்த ட்வீட்டிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த ட்வீட் வீடியோவை பார்த்துள்ளனர்.மேலும், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதை லைக் செய்துள்ளனர்.இதை வடிவமைத்தவருக்கு சமூக வலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.