லட்சத்தீவு பயணம்… ரூ.1,150 கோடி வளா்ச்சித் திட்டங்கள் – இயற்கை அழகுடன் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது – பிரதமர் மோடி..!

Scroll Down To Discover

லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சிலாகித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தனது பயண அனுபவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு, அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களையும் அவர் இணைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: “லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும் வளர்வதற்குமான வாய்ப்புள்ளதாக எனது மாலத்தீவு பயணம் அமைந்தது.

லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும், அங்கு வாழும் மக்களின் நம்ப முடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னமும் பிரமிப்பில் இருக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்காக நன்றி கூறுகிறேன்.

லட்சத்தீவில் மேம்பட்ட வளர்ச்சியின் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம். சிறந்த உள்கட்டமைப்பு, சிறந்த சுகாதாரம், வேகமான இணையம், குடிநீர் ஆகிய வசதிகளை ஏற்படுத்தவதோடு, உள்ளூர் கலாச்சாரத்தை பாதுகாத்து கொண்டாடுவதும் அரசின் நோக்கமாக உள்ளது. லட்சத்தீவில் துவக்கப்பட்ட மத்திய அரசின் திட்டங்கள் இந்த உணர்வை பிரதிபலிக்கின்றன.

அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுடன் உரையாடும் சிறந்த வாய்ப்பு கிடைத்தது. ஆரோக்கியம், தற்சார்பு, பெண்கள் முன்னேற்றம், விவசாய நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை அறிந்தபோது அது ஊக்கமளிப்பதாக இருந்தது. நான் அங்கு கேட்டவை உண்மையில் வளர்ச்சி சாத்தியமாகிக் கொண்டிருக்கிறது என்பதையே.

https://twitter.com/narendramodi/status/1742831490457858387

லட்சத்தீவின் இயற்கை அழகும் அமைதியும் மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக எவ்வாறு உழைப்பது என்பது குறித்து சிந்திக்க இது எனக்கு வாய்ப்பளித்தது. சாகச வீரர்களைக் காணவும் அவர்களை அரவணைக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கான பயணப் பட்டியலில் லட்சத்தீவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

https://twitter.com/narendramodi/status/1742831497776951361

தண்ணீருக்குள் மூழ்கி உள்ளே இருக்கும் இயற்கை காட்சிகளைக் காண்பதற்கான முயற்சியில் நான் ஈடுபட்டேன். அது ஓர் உற்சாகமான அனுபவம்.அழகிய கடற்கரைகளில் அதிகாலைப் பொழுதில் நடைபயணம் மேற்கொண்டது தூய்மையான பேரின்பத்தை அளித்தது” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தலைநகா் கவரத்தியில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு திட்டங்களின் தொடக்க நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா். பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோா் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பிரதமா் பேசியதாவது: லட்சத்தீவு பரப்பளவில் சிறியதாக இருக்கலாம். ஆனால், இங்குள்ள மக்களின் மனம் மிகப் பெரியது. எனக்கு இங்கு கிடைக்கப் பெற்ற அன்பு மற்றும் ஆசியால் நெகிழ்ந்து போயுள்ளேன். அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மத்தியில் முன்பிருந்த பாஜக அல்லாத அரசுகள், தங்களின் சுய அரசியல் ஆதாயங்களுக்கே பல ஆண்டுகளாக முன்னுரிமை அளித்தன.

தொலைதூர மாநிலங்கள், எல்லைப் பகுதிகள் மற்றும் தீவுகளின் வளா்ச்சியில் அவா்கள் எந்த அக்கறையும் காட்டவில்லை. ஆனால், இதுபோன்ற பகுதிகளின் மேம்பாட்டுக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.கடந்த 10 ஆண்டுகளாக நாட்டின் எல்லைப் பகுதிகள் மற்றும் கடல் விளிம்பில் உள்ள இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பேசிய நான், அடுத்த 1,000 நாள்களில் லட்சத்தீவுக்கு அதிவேக இணையதள வசதி கிடைக்கப் பெறும் என்று உறுதி அளித்திருந்தேன். அதன்படி, கொச்சி – லட்சத்தீவு இடையே கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் இணைப்புத் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இனி, லட்சத்தீவில் 100 மடங்கு அதிக வேகத்தில் இணையதள வசதி கிடைக்கும் என்றாா் பிரதமா் மோடி.முஸ்லிம்கள் அதிகம் வாழும் லட்சத்தீவு யூனியன் பிரதேசம், கண்ணாடி இழை கேபிள் மூலம் முதல்முறையாக இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் லட்சத்தீவில் இணையதள வேகம் 1.7 ஜிபிபிஎஸ்-இல் இருந்து 200 ஜிபிபிஎஸ்-ஆக அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதன்மூலம் இணையதள சேவைகள், மின்னணு நிா்வாகம், இணையவழி மருத்துவ சேவைகள், எண்ம வங்கிச் சேவைகள் உள்ளிட்டவை மேம்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்மாட் பகுதியில் நாளொன்றுக்கு 1.5 லட்சம் லிட்டா் உற்பத்தித் திறனுடன் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்; கவரத்தியில் முதல் சூரியமின் சக்தி திட்டம் உள்ளிட்டவற்றை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். அகத்தி, மினிகாய் உள்ளிட்ட 5 தீவுகளில் மாதிரி அங்கன்வாடி மையங்கள் அமைக்கும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.