ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14% அதிகரித்து 28% ஆக உயர்வு..!

Scroll Down To Discover

அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் கடை பணியாளர்கள் ஜூன் 7ம் தேதி முதல் 3 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களை கொண்டு ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு, மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனிடையே, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வார காலத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்திருந்தது.இந்நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலைக்‌ கடைகளில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கூட்டுறவுத்‌ துறையின்‌ கட்டுப்பாட்டில்‌ உள்ள நியாய விலைக்கடைகளில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்களுக்கு 22.02.2021 முதல் ஊதியம்‌ மறுநிர்ணயம்‌ செய்யப்பட்டு 14% அகவிலைப்படி பெற அணுமதிக்கப்பட்டிருந்தது. 1.01.2022 முதல்‌ அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14% அகவிலைப்படி உயர்வினை வழங்குமாறு நியாயவிலைக்கடை பணியாளர்கள்‌ சங்கத்தினர்‌ விடுத்த கோரிக்கையினை முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ கனிவுடன்‌ பரிசீலித்து 1.01.2022 முதல்‌ நியாயவிலைக்‌ கடைகளில்‌ பணியாற்றும்‌ விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ கட்டுநர்களுக்கு 28% அகவிலைப்படி பெறவும்‌, அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது உயர்த்தி வழங்கப்படும்‌ அகவிலைப்படி வீதங்களை பெறவும்‌ உத்தரவிட்டுள்ளார்‌.

இந்த அகவிலைப்படி உயர்வினால்‌ கூட்டுறவுத்‌ துறையின்‌ கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக்கடைகளில்‌ பணிபுரியும்‌ 19,658 விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ 2,852 கட்டுநர்கள்‌, என மொத்தம்‌ 22,510 பணியாளர்கள்‌ பயன்பெறுவார்கள்‌. இதனால்‌ ஆண்டொன்றுக்கு 73 கோடி ரூபாய்‌ கூடுதல்‌ செலவினம்‌ ஏற்படும்‌. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.