ரூ.4077 கோடி மதிப்பில் ஆழ்கடல் ஆய்வுத் திட்டம் ; மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்.!

Scroll Down To Discover

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் ஆழ்கடல் ஆய்வுத் திட்டத்தை ரூ.4077 கோடி மதிப்பில் 5 ஆண்டு காலத்திற்கு அமல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

ரூ 4077 கோடி மதிப்பீட்டில் ஆழ்கடல் திட்டத்தை புவி அறிவியல் அமைச்சகம் 2021 முதல் 2026 வரையிலான ஐந்தாண்டு காலகட்டத்தில் செயல்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், சுரங்கம், பல்லுயிரியல், எரிசக்தி, தூய்மையான தண்ணீர் உள்ளிட்டவற்றுக்கான சாத்தியக்கூறுகளை ஆழ்கடலில் ஆராய்வதற்கான தொழில்நுட்பங்களை இத்திட்டத்தில் உருவாக்குவதற்கும், நீலப் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்கும் தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றார்.

பி எம் என் எனப்படும் பாலி-மெட்டாலிக் நோட்யூல்கள் மற்றும் பி எம் எஸ் எனப்படும் பாலி-மெட்டாலிக் சல்ஃபைட்களுக்கான ஆய்வுப் பணிகளை முறையே மத்திய இந்தியப் பெருங்கடல் படுகை மற்றும் மத்திய மற்றும் தென்மேற்கு இந்தியக் கரைமேடுகளில் சர்வதேச கடற்பரப்பு ஆணையத்துடன் இணைந்து புவி அறிவியல் அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

380 மில்லியன் மெட்ரிக் டன்கள் பி எம் என், 75000 சதுர கிலோமீட்டர் ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிக்குள் இருப்பதாக ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த கனிமங்களின் மதிப்பு 110 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.