மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தீப சடங்கை முன்னிட்டு, அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் சரிந்து விழுந்ததில் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கோர விபத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 35 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. கிணற்றில் உள்ளே விழுந்த 19 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் மாயமாகி உள்ளார்.
இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.அத்துடன் கிணறு இடிந்து விழுந்து இறந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே இந்தூரில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இது குறித்து ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “இந்தூரில் எதிர்பாராதவிதமாக இன்று நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். இவ்விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும்”. இவ்வாறு பதிவில் தெரிவிக்கப்பட்டது.
Leave your comments here...