ராமேஸ்வரம் கோயிலில் 200 ஆண்டு பழமையான சிலைகள் சேதம் – பராமரிக்காத இந்து அறநிலையத்துறை..!

Scroll Down To Discover

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மனித வாழ்வியல் சிலைகள் சேதமடைந்துள்ள நிலையில், பராமரிக்காத ஹிந்து அறநிலையத்துறைக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராமாயண வரலாற்றில் தொடர்புடைய ராமநாதசுவாமி கோயில் 11ம் நூற்றாண்டில் உருவானது. கோயிலில் உலக பிரசித்தி பெற்ற நீளமான 3ம் பிரகாரம் 1740 முதல் 1770 வரை கருங்கல் தூண்களுடன் கட்டப்பட்டது.

இக்கோயிலில் உள்ள மூன்று பிரகாரங்கள், அனுப்பு மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ராஜகோபுரங்களில் உள்ள சிலைகள், ஓவியங்களை கலை நயத்துடன் வடிவமைத்துள்ளனர்.தீர்த்த தலமான இக்கோயிலில் ஆன்மிகம், கலை நயமிக்க சிற்பங்களுடன் கூடிய கட்டடமைப்புகள் பக்தர்களுக்கு இறை நம்பிக்கையும், மனதிற்கு அமைதியும் அளிக்கின்றன.

இக்கோயில் கிழக்கு நுழைவு வாசல் அனுப்பு மண்டப தூண்களில், அக்கால மக்களின் வாழ்வியல் முறை குறித்து தத்ரூபமாக 6 அடி உயரத்தில் சுண்ணாம்பு, கடுக்காய் உள்ளிட்ட சில மூலப்பொருள்களால் சிலையை வடிவமைத்துள்ளனர். இவை 200 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையானது. இதனை காணும் பக்தர்கள், அக்கால மக்களின் நாகரீகம், உடைகள், சடங்குகள் குறித்து அறிந்து கொள்ள முடிகிறது.

இச்சிலைகளை ஹிந்து அறநிலைத்துறையினர் முறையாக பராமரிக்காததால் சிலையின் கை, கால்கள் என 40 முதல் 60 சதவீதம் வரை சேதமடைந்துள்ளன. இதனை புதுப்பிக்காவிடில் ஓரிரு மாதங்களில் சிலைகள் முழுவதுமாக இடியும் அபாயம் உள்ளது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.