ராணுவத்தின் நீண்ட கால பணியில் சேர கூடுதலாக 147 பெண் அதிகாரிகளுக்கு ஒப்புதல்..!

Scroll Down To Discover

ராணுவத்தின் நீண்ட கால பணியில் சேர கூடுதலாக 147 பெண் அதிகாரிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

ராணுவத்தில் பெண் அதிகாரிகள் குறுகிய காலப் பணியில் (Short service commission) சுமார் 20 ஆண்டுகள் வரை பணியாற்றி வந்தனர். தங்களை ஆண் அதிகாரிகள் போல் ஓய்வு பெறும் வயது வரை நீண்ட கால பணியில் ( Permanent Commission ) இருக்க அனுமதிக்க உத்தரவிடும்படி உச்சநீதிமன்றத்தில் பெண் அதிகாரிகள் சிலர் வழக்கு தொடுத்தனர். இதையடுத்து பெண் அதிகாரிகளையும், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக நீண்ட கால பணியில் அனுமதிக்க உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை பிறப்பித்தது.

இதையடுத்து குறுகிய காலப் பணியில் உள்ள பெண் அதிகாரிகள், நீண்ட கால பணியில் சேர்க்க, 5ம் எண் சிறப்பு தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அமைக்கப்பட்டது. இதன் முடிவுகள் கடந்தாண்டு நவம்பரில் வெளியானது. இதில் நிராகரிக்கப்பட்ட பெண் அதிகாரிகளுக்கு அளவீடுகளை குறைத்து, மாற்றியமைக்கும்படி உச்சநீதிமன்றம் கடந்த 2021ம் ஆண்டு மீண்டும் ஒரு உத்தரவு பிறப்பித்தது.

இதன் படி நிரந்தர பணிக்கான தேர்வு முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு புதிய முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் கூடுதலாக 147 பெண் அதிகாரிகள் நிரந்தர பணியில் சேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 615 பெண் அதிகாரிகளில், 424 பேர் நீண்ட கால பணியில் இருக்க அனுமதி பெற்றுள்ளனர். சில பெண் அதிகாரிகளின் முடிவுகள் நிர்வாக காரணங்களுக்காவும், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தேர்வு வாரியத்தால் பரிசீலிக்கப்பட்டு, நீண்ட கால பணி வழங்கப்படாத பெண் அதிகாரிகளும், ஓய்வூதிய தகுதியுடன் குறைந்து 20 ஆண்டு காலம் பணியாற்ற தகுதியுடைவர்கள் ஆவர். ஏற்கனவே 20 ஆண்டு கால பணியை முடித்தவர்கள், ஓய்வூதியத்துடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் 20 ஆண்டு வரை பணியாற்றி ஓய்வூதியத்துடன் அனுப்பப்படுவர்.

ஜூனியர் பெண் அதிகாரிகளை நீண்ட கால பணியில் சேர்க்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. 10வது ஆண்டு சேவையில், அவர்கள் நீண்டகால பணிக்கு பரிசீலனை செய்யப்படுவர். பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நீண்ட கால பணி வழங்குவதன் மூலம், அவர்கள் பாலின சமத்துவத்துக்கு மாறி வருகின்றனர் மற்றும் ஆண் ராணுவ அதிகாரிகளுக்கு நிகராக சவாலான பொறுப்புகளையும் ஏற்கவுள்ளனர்.