ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராகவும் மற்றும் தலைமை செயல் அதிகாரியாகவும் திரு சுனீத் சர்மா நேற்று பொறுப்பேற்றார். இவர் அலுவல் சார்ந்து இந்திய அரசின் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றுவார்.
சுனீத் சர்மாவை ரயில்வே வாரிய தலைவராக நியமிப்பதற்கு, மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு முன்பாக, கிழக்கு ரயில்வே பொது மேலாளராக பணியாற்றினார்.
இந்திய ரயில்வேயில் கடந்த 1979ம் ஆண்டு சேர்ந்தார். இவர் ஐஐடி கான்பூரில் மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்து ரயில்வேயில் சேர்ந்தார். இவர் 40 ஆண்டுகளுக்கு மேல், இந்திய ரயில்வே துறையில் பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். மும்பை பாரெல் ரயில்வே பணிமனையில் தலைமை மேலாளராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
மும்பை புறநகர் ரயிலில், கடந்த 2006ம் ஆண்டு குண்டு வெடித்தபோது, சில மணி நேரத்தில் ரயில் சேவை மீண்டும் தொடரப்பட்டது. அந்த சீரமைப்புக் குழுவில் திரு சுனீத் சர்மாவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ரேபரேலியில் உள்ள நவீன ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், இவர் பொது மேலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அப்போது ரயில் பெட்டிகள் தயாரிப்பை இரு மடங்கு அதிகரித்து சாதனை படைத்துள்ளார். கிழக்கு ரயில்வேயில் பணியாற்றியபோது, சரக்கு ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளையும் இவர் மேற்கொண்டார். ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடந்த தொழிற் பயிற்சிகளில் இவர் கலந்து கொண்டுள்ளார். இவர் தனது பணிக் காலத்தில் பல விருதுகளை பெற்றுள்ளார். சிறந்த விளையாட்டு வீரரான இவர், பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவு பயிற்சி பெற்றவராவர். பேட்மிண்டன், ஸ்குவாஷ் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் உள்ளவர்.
Leave your comments here...