முதல்வர் பதவி தப்புமா..? தப்பாதா..? மோடியை நாடும் உத்தவ் தாக்கரே…?

Scroll Down To Discover

மஹாராஷ்டிராவில் கடந்த ஆண்டு, நவம்பர், 28ல், சிவசேனா – தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், கூட்டணி, ஆட்சி அமைத்தது. முதல்வராக, சிவசேனா தலைவர், உத்தவ் தாக்கரே பதவியேற்றார். அவர் அப்போது, எம்எல்ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ இல்லை. அரசியல் சட்டப்படி, அவர், ஆறு மாதங்களுக்குள், எம்எல்ஏ.,வாகவோ, எம்.எல்.சி.,யாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

மே.27ம் தேதியுடன், உத்தவ், முதல்வராக பதவியேற்று, ஆறு மாதங்கள் நிறைவு பெறுகிறது. மஹாராஷ்டிராவில், காலியாக உள்ள, ஒன்பது எம்.எல்.சி., இடங்களுக்கு, கடந்த, 24ம் தேதி, தேர்தல் நடந்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில், போட்டியிட்டு, எம்.எல்.சி.,யாக தேர்வு பெற, உத்தவ் முடிவு செய்திருந்தார். ஆனால், கொரோனா பரவலால், நாடு முழுவதும் அரசியல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன. இதனால், மஹாராஷ்டிராவில், எம்.எல்.சி., தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த, 9ம் தேதி, மும்பையில் நடந்த மஹாராஷ்டிரா அமைச்சரவை கூட்டத்தில், ‘மாநில கவர்னருக்கான, இரண்டு எம்.எல்.சி. இடங்கள் ஒதுக்கீட்டில், ஒரு இடத்தில், உத்தவை நியமிக்க வேண்டும்’ என கவர்னர் கோஷ்யாரிக்கு கோரிக்கை விடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம், கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது பற்றி, சட்ட வல்லுனர்களிடம், கவர்னர் ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது.

உத்தவை எம்.எல்.சி.யாக நியமிப்பது பற்றி, கவர்னர், இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, கவர்னர், கோஷ்யாரியை, துணை முதல்வர், அஜித் பவார், அமைச்சர்கள், ஜெயந்த் பாட்டீல், ஏக்நாத் ஷிண்டே, அனில் பராப், பாலாசாகேப் தோரட், அஸ்லாம் ஹேக் ஆகியோர் சந்தித்தனர். அப்போது, முதல்வர் உத்தவ் தாக்கரேவை, எம்.எல்.சி.,யாக நியமிக்க, கோரிக்கை விடுத்தனர். ஆனால், கவர்னர், அவர்களிடம், எந்த உறுதியையும் அளிக்கவில்லை.

இது பற்றி, நீர்வளத்துறை அமைச்சர், ஜெயந்த் பாட்டீல் கூறுகையில், ‘உத்தவ் தாக்கரேவை, எம்.எல்.சி.,யாக நியமிக்க கோரி, மஹாராஷ்டிரா அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை, கவர்னரிடம் கொடுத்தோம். கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றார்.


இதற்கிடையே, மாநில அமைச்சரவை கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்திற்கு துணை முதல்வர், அஜித்பவார் தலைமை வகித்தார். கூட்டத்தில், முதல்வர், உத்தவ் தாக்கரேவை எம்.எல்.சி,.யாக நியமிக்க, கவர்னருக்கு, இரண்டாவது முறையாக பரிந்துரைத்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக எனது அரசு உரிய தடுப்பு நடவடிக்கை எடுத்து வரும் இந்த சூழ்நிலையில், எனது தலைமையிலான ஆட்சியை பலவீனப்படுத்தும் விதமாக அரசியல் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது சரியல்ல. எனவே,இந்த விவகாரத்தில் தாங்கள் கவனம் செலுத்த வேண்டும்” எனக்கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.கவர்னர், மே., 27ம் தேதிக்குள், உத்தவை, எம்.எல்.சி.,யாக நியமிக்கவில்லை என்றால், முதல்வர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டி வரும்.