முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயனாளிகள் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருக்கிறது.
பெண் குழந்தைகளின் பெயரில் ரூ.50,000 வைப்பு நிதியாக தமிழ்நாடு மின் விசை நிதி நிறுவனத்தில் வைக்கப்படுகிறது. இரு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வீதம் வைப்பு நிதி செலுத்தப்படுகிறது. திட்டத்தின் வைப்பு நிதிக்கான ஆவணம் குழந்தையின் பெற்றோரிடம் வழங்கப்படுகிறது. மத்திய அரசின் விதிகளின்படி, திட்டத்தின் பயனாளிகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம்.
அதன்படி, இத்திட்டத்தின் கீழ்வரும் பயனாளிகள், ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக சமர்ப்பிக்க வேண்டும். இதுவரை ஆதார் எண் பெறப்படாத நிலையில், ஆதார் எண்ணுக்காக பெற்றோர் மூலம் விண்ணப்பித்து, அதைக்கொண்டு திட்டத்தின் பயனைப் பெற விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தனது திட்டங்களில் பயன்பெறும் பயனாளிகள், தங்களது ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழக அரசின் திட்டங்களிலும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, உதவித்தொகை, ஓய்வூதியம் பெறுவோருக்கு ஆதார் இணைப்பு கட்டாயம் என்பதை சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனடைவோரும் விண்ணப்பிக்கும்போது ஆதார் எண்ணை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Leave your comments here...