முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞர் – காலை கழுவிய முதலமைச்சர் சிவராஜ் சிங் செளகான்…!

Scroll Down To Discover

மத்தியபிரதேசத்தில் முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் கழுவினார். மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தின் சட்டமன்ற உறுப்பினரான கேதார்நாத் சுக்லாவின் நெருங்கிய நண்பர் பர்வேஷ் சுக்லா.

இவர் பழங்குடியின தலித் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்து அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். வாயில் சிகரெட் புகைத்தபடி, இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ இணையத்தில் வெளியானது. பழங்குடியினருக்கு இத்தகைய கொடுமை நடந்துள்ளது என்பதை அறிந்த உடனேயே கடினமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் உத்தரவுப்படியே இளைஞரின் முகத்தில் சிறுநீர் கழித்த சுக்லா நேற்று கைது செய்யப்பட்டதோடு மட்டுமின்றி அவர் கட்டிய வீடும் இடிக்கப்பட்டுள்ளது. புல்டவுஸர் மூலமாக அவரது வீட்டை இடித்த அதிகாரிகள் சட்டவிரோதமாக வீடு கட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில் பாதிக்கப்பட்ட இளைஞர் தஷ்ரத் ராவத்தை இல்லத்திற்கு அழைத்து பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான், இளைஞரிடம் மன்னிப்பு கோரினார்.

மேலும் அவமதிக்கப்பட்ட இளைஞரின் கால்களை கழுவி, அவருக்கு பொட்டு வைத்து மரியாதை செய்தார். தொடர்ந்து இளைஞருக்கு ஆறுதல் கூறி, பரிசுப்பொருட்கள் வழங்கி சமாதானம் செய்தார். பழங்குடியினருக்கு எந்தவொரு கொடுமையும் நடக்கக்கூடாது என்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு உதாரணமாக விளங்க வேண்டும் என்ற வகையிலேயே மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிகழ்வு குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.