மின்சார வாகனங்களுக்கு, உள்நாட்டு மின்கலங்களை உருவாக்க ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
மோட்டார் வாகனத்துறையைச் சார்ந்த அரசு முகமைகள், ஆராய்ச்சி நிறுவனங்களின் கூட்டத்துக்குத் தலைமை வகித்த அமைச்சர் த நிதின் கட்கரி பேசியதாவது:
மோட்டார் வாகனத்துறையில், உலகின் முன்னணி நாடாக மாறும் நிலையில், இந்தியா இன்று உள்ளது. ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிசக்தி நாட்டில் மலிவாகவும், எளிதாகவும் கிடைப்பதால், அதை பயன்படுத்துவதில் விஞ்ஞானிகள், கல்வி மற்றும் தொழில் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். லியான் மின்கலத்தின் 81 சதவீத பாகங்கள் உள்நாட்டில் கிடைக்கின்றன.
அதனால், லியான் பேட்டரிகளை குறைந்த செலவில் தயாரிக்கும் நிலை இந்தியாவில் உள்ளது. இது அதிகளவில் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். லித்தியம் – அயன் மின்கலங்கள் உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்தினாலும், இதே போன்ற வாய்ப்புகள் இந்தியாவிலும் உள்ளன. இத்துறையில் 49 சதவீத வாய்ப்புகள் உள்ளதால், உலகளாவிய ஒப்பந்தங்களைப் பெறுவதை இந்திய சுரங்க நிறுவனங்கள் முயற்சிக்கலாம்.
தற்போது இந்தியாவில் மோட்டார் வாகனத்துறை ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது, விரைவில் இது ரூ. 10 லட்சம் கோடியாக மாறும். பழைய வாகனங்கள் உடைப்புக் கொள்கையின் கீழ், ஒரு கோடி வாகனங்கள் உடைப்புக்குச் செல்லும். இதன் மூலம் அலுமினியம், தாமிரம், எஃகு , ரப்பர் மற்றும் இதர பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும். இது மின்கலப் பாகங்களின் விலையை குறைக்க உதவும்.
Leave your comments here...