மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

Scroll Down To Discover

சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள தற்காலிகப் பாதை விரைவில் நிரந்தரமாக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை கண்டு களிக்க கடற்கரையில் தற்காலிக பாதை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

அதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலு ஆகியோர் திறந்து வைத்தனர். மேலும் மாற்றுத்திறனாளிகளை கடலின் அருகே வீழ்சேர் மூலமாக அழைத்துச் சென்றனர்.


இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எத்தனை முறை சென்றாலும் கடல் சலிக்காததது என்றும், அதில் ஒரு முறையேனும் கால் நனைக்க நினைத்திருந்த மாற்றுத்திறனாளிகளின் எண்ணம் நனவாகும் வகையில் தற்காலிகப் பாதை ஏற்படுத்தியுள்ளதாகவும், அதை விரைவில் நிரந்தரம் ஆக்குவோம் என்றும் கூறியுள்ளார்.