உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஐஐடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதனிடையே, இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவி தனது நண்பணான சக மாணவனுடன் கடந்த நவம்பர் 2ம் தேதி அதிகாலை 2 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, பல்கலைக்கழகத்திற்குள் பைக்கில் வந்த 3 பேர் துப்பாக்கிமுனையில் மாணவனை மிரட்டி சரமாரியாக தாக்கினர். மாணவியை கடுமையாக தாக்கிய அந்த கும்பல் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மறைவான பகுதிக்கு மாணவியை இழுத்து சென்றது.
அங்கு மாணவியை 3 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும், மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தி அதை வீடியோவாக எடுத்துள்ளது. பின்னர், அந்த 3 பேரும் அங்கிருந்து பைக்கில் தப்பிச்சென்றுவிட்டனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பல்கலைக்கழக மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டம் நடத்தியும் குற்றவாளிகளை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
பல்கலைக்கழக மாணவ, மாணவியரின் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் குனல் பாண்டே, அபிஷேக் சவுகான், சக்ஷன் பட்டேல் என்பதும் அவர்கள் அனைவரும் பாஜக நிர்வாகிகள் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் வாரணாசி பாஜக ஐடி பிரிவு நிர்வாகிகளாக செயல்பட்டு வந்துள்ளனர். இதையடுத்து, கைது செய்யப்பட்ட 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கி பாஜக மாவட்ட தலைவர் விஷ்வகர்மா உத்தரவிட்டுள்ளார்.
Leave your comments here...