மாட்டுத்தீவன ஊழல் : 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை…!

Scroll Down To Discover

பீஹார் ராஷ்ட்டிரிய ஜனதா தள கட்சி ஆட்சியில் இருந்த போது முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், பதவி வகித்த காலத்தில் கால்நடைகளுக்காக வாங்கப்பட்ட மாட்டுத்தீவனத்தில் பல கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக சிபிஐ தரப்பில் 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் லாலு பிரசாத் மீது மட்டும் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013ல் லாலு பிரசாத் குற்றவாளி என முதல் வழக்கில் தீர்ப்பளித்தது.

இதன்பின்னர் அடுத்தடுத்து 2 வழக்குகளிலும் அவர் தண்டனை பெற்றார். கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் ஏற்கெனவே குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனை பெற்றதால் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு ஒட்டுமொத்தமாக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளாக ஜார்கண்டின் ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்டு இருந்த லாலுவுக்கு சில மாதங்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் 4 வழக்குகளிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது.

இந்தநிலையில் கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்கான தண்டனை விவரங்களை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது. அதில், 5வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.