மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ பார்த்து அலுவலகம் செல்ல உத்தரவு..!

Scroll Down To Discover

இந்தியாவில் இன்று(ஏப்.,30) காலை 09:00 மணி நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,050 ஆக அதிகரித்துள்ளது. 1,074 பேர் பலியாகி உள்ளனர். 23,651 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 8,325 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ மொபைல் செயலியை (ஆப்) உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

அந்த உத்தரவில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:- ஊழியர்கள், அலுவலகம் புறப்படும்போது ஆரோக்கிய சேது செயலியை பார்க்க வேண்டும். அதில், கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உணர்த்தும்வகையில், ‘பாதுகாப்பு’, ‘குறைந்த அபாயம்‘ என்று காட்டினால் மட்டும் அலுவலகத்துக்கு புறப்படுங்கள்.‘அதிக அபாயம்‘, ‘மிதமானது’ என்று காட்டினால், அலுவலகம் வரக்கூடாது. 14 நாட்களோ அல்லது ‘பாதுகாப்பு’ என்று காட்டும்வரையோ தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

இதை செயல்படுத்துவதை ஒவ்வொரு துறையிலும் உயர் அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும்.மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை மட்டுமே சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது