நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தில் தொடர்ந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தொழில் நிறுவனங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன, பொது போக்குவரத்தும் இயங்கத் தொடங்கியுள்ளன. இருப்பினும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், நான்காம் கட்ட தளர்வுகளை சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி, ஒன்பது முதல், 12ம் வகுப்பு வரையில், விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு, இன்று முதல், பள்ளிகளை துவக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, ஆந்திரா, அசாம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வகுப்புகள் துவங்குகின்றன.
முதற்கட்டமாக, 15 நாட்களுக்கு, வகுப்புகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பின் சூழ்நிலைக்கு ஏற்ப, வகுப்புகளை தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும்.மாணவர்களின் வருகை கட்டாயம் அல்ல; விரும்பும் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பாடம் கற்றுக் கொள்ளலாம். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டியது அவசியம்.
டில்லி, குஜராத், கேரளா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கர்நாடகா, பீஹார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், பள்ளிகள் திறக்கப்படாது என, அந்தந்த அரசுகள் தெரிவித்து உள்ளன. திறக்கப்படும் பள்ளிகளில், உடல் வெப்பநிலையை பரிசோதிப்பது, கிருமி நாசினி பயன்படுத்துவது, முக கவசம் அணிவது, 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் இயங்குவது உள்ளிட்ட வழிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...