மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இலவச லட்டு – காணொளிக் காட்சி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

Scroll Down To Discover

மதுரை என்றாலே பலருக்கும் உடனடியாக நினைவுக்கு வருவது மீனாட்சி அம்மன் கோவிலாகும். சிவபெருமான் மற்றும் அம்மன் இருவருக்குமான கோவில்களில் முதன்மைச் சிறப்பு பெற்றது மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில். இந்தியாவில் உள்ள தூய்மையான புனித தலங்களில் 2-வது இடம் பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, சமீபத்தில் அதற்கான விருது வழங்கப்பட்டது. கோயில்களில் அதன் வருமானத்திற்கு தகுந்தாற்போல பிரசாதமாக லட்டு, புளியோதரை, பொங்கல், வெண்பொங்கல் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் காலையில் ஞானப்பால் மட்டுமே பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக 30 கிராம் லட்டு இலவசமாக வழங்கப்படவுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள், மீனட்சி அம்மனை தரிசித்துவிட்டு, சொக்கநாதரை தரிசிக்கச் செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகே, பக்தர்களுக்கு இந்த இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. கோயில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கப்படும் வரை லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்