மதுரை ஆதீனம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு..!

Scroll Down To Discover

மதுரை ஆண்டாள்புரத்தை சேர்ந்த வீரமுருகன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் மதுரை ஆதீன மடம் 6 ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டு, தற்போது இந்து சமய அறநிலையத்துறை மற்றும் குருமகா சன்னிதானத்தின் மேற்பார்வையில் செயல்பட்டு வருவதாகவும் கடந்த ஜூன் மாதம் 7 ம் தேதி மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக 66 வயதுடைய சுந்தரமூர்த்தி தம்பிரானை மதுரை ஆதீனம் அருணகிரிநாத திருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஆதீனத்துக்கு உட்பட்ட ஒருவரையே, அதன் நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என்பது ஆதீன மடத்தின் விதி என்றும் இந்து சமய அறநிலையத்துறை விதிகளும் இதையே வலியுறுத்துகின்றன என்றும் மனுதாரர் வீரமுருகன் கூறியுள்ளார். ஆனால் இந்த விதிகளுக்கு புறம்பாக, திருவாவடுதுறை ஆதீன மடத்தை சேர்ந்த ஒருவரை மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதினமாக நியமித்துள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். இதனால் மதுரை ஆதீனத்தின் இளைய ஆதினமாக சுந்தரமூர்த்தி தம்பிரான் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று மனுவில் மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆதீனம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் மாதம் 20 தேதிக்கு ஒத்திவைத்தார்.

நமது நிருபர்.