மதுராவில் கிருஷ்ண ஜன்ம பூமியை மீட்க கோரிய வழக்கு – மே.19ஆம் தேதி தீர்ப்பு!!

Scroll Down To Discover

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமி-ஷாஹாய் இடிகா மசூதி வழக்கு மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முழுமையாக நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் மே 19ஆம் தேதி வழங்கப்படவுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் லக்னோ பகுதியைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், கிருஷ்ணர் பிறந்த இடமான இங்கு கத்ரா கேசவ் தேவ் கிருஷ்ணர் கோயில் உள்ளது. 1669-70 காலகட்டத்தில், முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உத்தரவின் பேரில் 13.37 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் மசூதி கட்டப்பட்டது.

இந்த மசூதியை அகற்ற வேண்டும் என நீதிமன்றத்தில் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதையடுத்து, வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நிறைவடைந்த நிலையில், மே 19ஆம் தேதி தீர்ப்பளிக்க உள்ளதாக நீதிபதி ராஜீவ் பாரதி உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகே உள்ள கியான்வாபி மசூதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சர்வே செய்து வீடியோ பதிவு மேற்கொள்ளும் பணி நேற்று தொடங்கியது. இதற்கு எதிராக அங்கு போராட்டம் நடைபெற்ற நிலையில், பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்த பணி தொடங்கப்பட்டது.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க அரசு காவல்துறையை உஷார் நிலையில் வைத்துள்ளது.