மகாநதி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையான கோவில் கண்டுபிடிப்பு…!

Scroll Down To Discover

ஒடிசா மாநிலத்தில் உள்ளது நாயகர் நகரம். இந்த நகரத்தில் ஓடும் மகாநதி ஆற்றில் 500 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1933 ஆம் ஆண்டில் வெள்ளத்தின்போது இந்தக் கோயில் நீரில் மூழ்கியதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் நதி அதன் போக்கை மாற்றியதால், ஒரு கிராமமும் கோயிலும் நயாகரில் மூழ்கிப் போனதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஒடிசாவின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் திர் கூறியதாவது:கட்டாக்கில் உள்ள பத்மாவதி பகுதி அருகே உள்ள பைதேஸ்வர் பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கோயிலுக்கான கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் அடிப்படையில் இது 15 அல்லது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகின்றது.

மேலும் விரைவில் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துக்கு கடிதம் எழுதவுள்ளோம். மேலும் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுவது மற்றும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது வரை 65க்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த கோயில்கள் மகாநதி நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோயில் ஹிராகுட்டில் உள்ளன. நீர் தேக்கத்தை அகற்றி கோயிலை புனரமைக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.