இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில் மகப்பேறு, குழந்தைகள் நலம் மற்றும் தொடர் சிகிச்சைக்குரிய நோய்களுக்கான சிகிச்சையைத் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று தனியார் மருத்துவமனைகளுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தனியார் துறையிலுள்ள கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தொடர் சிகிச்சையளித்து வரும் மருத்துவமனைகள், நீரழிவுக்காக சுத்திகரிப்பு செய்யும் மருத்துவமனைகள், புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள், நரம்பியல் சார் நோய்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகள் பல மூடப்பட்டிருப்பதாகவும் சிகிச்சையளிக்க மறுப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவந்தன.
இதுபற்றியறிந்த மருத்துவம் மற்றும் ஊரக நல்வாழ்வுத் துறை இயக்குநர், இதுபோன்ற எந்த சேவைகளையும் மறுக்கக் கூடாது, இது சற்றும் அறமல்ல என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் எச்சரித்துள்ளார்.இதுதொடர்பாக, அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் எழுதியுள்ள அவர், இந்த அறிவுரைகளுக்கு மாறாக நடந்துகொண்டால் – மருத்துவமனைகளை மூடிவிட்டு அல்லது சிகிச்சையளிக்க மறுத்தால் – மருத்துவமனைப் பதிவு ரத்து, தற்காலிக ரத்து உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்
Leave your comments here...