தமிழகம் முழுவதும் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் உள்ள ஜெ.கோவிலில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமாரிடம், சுகாதார இணை இயக்குனர் அர்ஜுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் போலியோ சொட்டு மருந்து போட வந்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்த தனுக்சன்,தர்வின் ஆகிய 3 வயது குழந்தைகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசியதாவது:- போலியோ நோயை இந்தியாவில் முழுமையாக ஒழிப்பதற்கு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது.இதில் தமிழகம் முழுவதும் இன்று 43ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகாம்களில் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 3,16,916 குழந்தைகளுக்கு வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த பணியில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 7,412 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2,000 அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் திறந்து வைத்தார் இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 34 மினி கிளினிக் முதல் கட்டமாக தொடங்கப்பட்டுள்ளது இதுவரை 85,000 பேர் பயன்பெற்றுள்ளனர். இந்தக் கோவில் வழிபாடு மையமாக அல்லாமல் சேவை மையமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இன்றைக்கு முதல் நிகழ்ச்சியாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சைக்கிள் உள்ளிட்ட திட்டங்களை வழங்கினார்.
இந்த திருக்கோயிலில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போட்டித் தேர்வு எதிர்கொள்ள பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. அதே போல் கிராமங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வண்ணம் இங்கு மாலை நேர பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.அது மட்டுமல்லாது இளைஞர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், விவசாயிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பல்வேறு பயிற்சி வகுப்புகள் இங்கு நடைபெற உள்ளது.
இந்த திருக்கோயில் அறிவு சார்ந்த சேவை மையமாகவும் வழிபாடு மையமாகவும் அமைந்துள்ளது.அது மட்டுமல்லாது இங்கே திருமணங்கள், காதுகுத்து விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சியும் நடத்திக்கொள்ள அனுமதி உண்டு.இங்கு எந்த கட்டணமும் காணிக்கையும் கிடையாது. நிகழ்ச்சி நடத்துவதற்கு உரிய தேவைகளையும் உதவிகளையும் நிச்சயம் நாங்கள் வழங்குவோம் என்று அவர் கூறினார்.
Leave your comments here...