பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை.!

Scroll Down To Discover

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் 3 பக்கங்களைக் கொண்ட இந்த அறிவுறுத்தல் கடிதத்தை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வத்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது. அதில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, தடயங்களை சேகரித்தல் ஆகியவற்றில் விரைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களின் தகவல்களை பாதுகாத்து வைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக்கூடாது என தெரிவித்துள்ள மத்திய அரசு, இதுபோன்ற தவறுகள் நடப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டப்பிரிவுகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மாநில அரசுகள் அறிவுறுத்த வேண்டும் எனவும், வழக்குகளை சரியான நேரத்தில் முடித்து, குற்றவாளிகளுக்கு உரிய நேரத்தில் தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடிதத்தில் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.