பெங்களூரு கலவரம் தொடா்பான 2 வழக்குகள் : என்.ஐ.ஏ., வசம் ஒப்படைப்பு

Scroll Down To Discover

கர்நாடகாவை சேர்ந்த, காங்கிரஸ் – எம்.எல்.ஏ., அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர், கடந்த ஆகஸ்ட், 11ல், தன் சமூக வலைதளபக்கத்தில், பதிவு ஒன்றை வெளியிட்டார். அது, மத ரீதியாக, ஒரு பிரிவினரை புண்படுத்தியதாக கூறப்பட்டது. இதைஅடுத்து, எம்.எல்.ஏ., அகண்ட ஸ்ரீனிவாசமூர்த்தியின் வீடு அமைந்துள்ள, பகுதியில் பெரும் கலவரம் ஏற்பட்டது.

டி.ஜே., ஹள்ளி மற்றும் கே.ஜி., ஹள்ளி போலீஸ் ஸ்டேஷன்கள் சூறையாடப்பட்டன. இந்த கலவரத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில், நால்வர் பலியாகினர். இந்த கலவரம் தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ., அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட, 300க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக, யு.ஏ.பி.ஏ., எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம் உட்பட, பல்வேறு பிரிவுகளில், இரண்டு வழக்குகளை, போலீசார் பதிவு செய்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கு விசாரணைகள், என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பினர் வசம், நேற்று ஒப்படைக்கப்பட்டன. இதற்கான உத்தரவை, மத்திய உள்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ளது. இதற்காக, ஐ.ஜி., அந்தஸ்திலான அதிகாரியின் தலைமையில், என்.ஐ.ஏ., அதிகாரிகள், பெங்களூருவில் முகாமிட்டு, விசாரணையை துவக்கி உள்ளனர்.