பெங்களூருவில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
ஹென்னூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக நேற்று (அக்.22) மாலை இடிந்து விழுந்தது. இதில் அக்கட்டிடத்தில் பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். உடனடியாக தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சியோரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏழு அடுக்குகளைக் கொண்ட அந்த கட்டிடம் சரியும் சிசிடிவி காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பகுதியில் 4 மாடிக் கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் விபத்து பகுதியை நேற்று மாலை நேரில் பார்வையிட்டார். கட்டுமானப் பணியை மேற்கொண்ட கட்டுமான நிறுவனம், ஒப்பந்ததாரர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.
Leave your comments here...